வாங்க..வாங்க..! சுற்றுலா பயணிகளை கவர 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்.. எந்த நாட்டில் தெரியுமா?
ஹாங்காங் நாட்டில் சுற்றுலா பயணிகளை கவர 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை அந்த நாடு இலவசமாக வழங்க உள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாக ஹாங்காங் அறிவித்துள்ளது.
74 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடு ஹாங்காங். பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங் கடந்த 1997 ஆம் ஆண்டு விடுபட்டது.
அதன்பிறகு சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி நாடாக ஹாங்காங் இருந்து வருகிறது. சிறந்த சுற்றுலா முனையமாகவும் இருந்து வந்த ஹாங்காங் கொரோனா பெருந்தொற்று பரவலால் தனிமைப்படுத்திக்கொண்டது.

6 லட்சம் பேர் மட்டுமே பயணம்
சீனாவின் கொரோனா விதிகளை பின்பற்றிய ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொண்டதால் அங்கு பெரிய அளவில் வைரஸ் பரவலும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஒமிக்ரான் வகை கொரோனா பரவலுக்கு பிறகே ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்தது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா முற்றிலும் முடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

3 ஆண்டுகளுக்கு பிறகு
கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது வெறும் ஒரு லட்சம் மட்டுமே ஆகும். கடுமையான பாதுகாப்பு சட்டங்கள், அரசியல் அடக்குமுறைகள், கொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் செய்வதற்கு உகந்த நாடு என்ற ஹாங்காங்கின் பிம்பமும் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் கடுமையான வருவாய் இழப்பையும் சந்தித்த ஹாங்காங் 3 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுலாவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.

5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்
ஹல்லோ ஹாங்காங் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் ஹாங்காங் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஹாங்காங் நாட்டின் சீப் எக்ஸிகியூட்டிவ் (தலைவர்) ஜான் லீ அறிவித்துள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த இலவச டிக்கெட்டுகள் வினியோகிக்கப்படும் என்றும் உள்ளூர் விமான நிறுவனங்களான கேதே பசிபிக், எச்.கே எகிஸ்பிரஸ், ஹாங்காங் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் மூலம் இந்த இலவச டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் ஹாங்காங் அறிவித்துள்ளது.

மிகப்பெரும் வரவேற்பு இதுவாகத்தான்..
கோடைக்காலங்களில் உள்ளூர் மக்களுக்கு 80 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வினியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த பகுதிக்கு என்ற இந்த இலவச விமான டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்ற விவரம் விமான நிறுவனங்களின் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. உலகின் மிகப்பெரும் வரவேற்பு இதுவாகத்தான் இருக்கும் என்று ஹாங்காங் தலைவர் லீ இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு பேசினார்.

6 மாதத்திற்கு ஆஃபர்கள்
லாட்டரி முறை மற்றும் ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம் மற்றும் புரொமோஷனல் கேம்ஸ்கள் போன்றவற்றின் மூலமாக இந்த இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் சுமார் ஆறு மாத காலத்திற்கு இத்தகைய ஆஃபர்கள் வழங்கப்படும் எனவும் ஹாங்காங்கின் விமான நிலைய ஆணையத்தின் சி இ பெர்ட் லாம் தெரிவித்தார். மேலும் விமான டிக்கெட்டுகளை பெறுபவர்கள் தங்களுடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் அழைத்து வருவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் 5 லட்சம் இலவச டிக்கெட்டுகள் கொடுத்தாலும் 15 லட்சம் விசிட்டர்கள் வருகை தருவார்கள் என்று எதிபார்ப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications