பிளாக்மெயில்! அமெரிக்கா- சீனா இடையே தீவிரமடையும் வர்த்தக போர்! இடையில் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார். இது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் டிரம்பின் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சில நாடுகள் பதிலடியாக வரிகளை அறிவித்தன. அப்படி பதிலடி வரிகளை அறிவித்த நாடுகளில் முக்கியமானது சீனா.. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தீவிரமாகி இருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்த போதே, அது சர்வதேச வணிக போரைத் தொடங்கி வைக்கும் என வல்லுநர்கள் பலரும் எச்சரித்தனர். இப்போது அவர்கள் எச்சரித்தது அப்படியே நடந்துள்ளது. டிரம்பின் வரிக்குக் கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் பதிலடி தரும் விதமாக வரிகளை அறிவித்துள்ளனர். அதில் சீனாவின் வரி தான் டிரம்பை கொந்தளிக்க வைத்துள்ளது.

டிரம்பின் வரி
அதாவது சீனாவுக்கு டிரம்ப் 34% வரிகளை அறிவித்திருந்தார். இந்த வரியை டிரம்ப் திரும்பப் பெறவில்லை என்றால் அமெரிக்கப் பொருட்களுக்கு அதே 34% வரியை விதிக்கப்போவதாகச் சீனா அறிவித்திருந்தது. அதுவும் டிரம்ப் வரி ஏப்ரல் 9ம் தேதி அமலுக்கு வரும் சூழலில், அதற்கு மறுநாள் ஏப்ரல் 10ம் தேதி முதல் தங்கள் வரிகள் அமலுக்கு வரும் எனச் சீனா அறிவித்திருந்தது.
சீனாவின் இந்த நடவடிக்கை டிரம்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மீதான 34% வரியைச் சீனா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எச்சரித்துள்ள டிரம்ப், இதற்காக 24 மணி நேரக் காலக்கெடுவையும் விதித்துள்ளார். ஒருவேளை சீனா தனது வரிகளை வாபஸ் பெறவில்லை என்றால் அவர்கள் மீது கூடுதலாக 50%க்கு மேல் வரி விதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா- சீனா வரி மேல் வரி
டிரம்ப் தனது பிளானில் உறுதியாக இருந்து கூடுதல் 50% வரிகளை அறிவித்தால்.. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களின் மீதான ஒட்டுமொத்த வரி 104 சதவீதமாக உயரக்கூடும். கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட சர்வதேச வர்த்தகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் இரு நாடுகளும் மாற்றி மாற்றி வரிகளை அறிவித்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவே இருக்கிறது.

அமெரிக்கா பிளாக்மெயில்
டிரம்பின் 50% வரி எச்சரிக்கையைத் தொடர்ந்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சீனா மீதான வரிகளை அதிகரிப்போம் என அமெரிக்கா அச்சுறுத்தி, தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது.. இது அப்பட்டகமாக ஒரு பிளாக் மெயில்.. அமெரிக்காவின் மிரட்டல் தன்மையை இது உலகிற்கு அம்பலப்படுத்துகிறது. இதுதான் எங்கள் வழி என அமெரிக்கா திட்டவட்டமாக இருந்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். சீனா இறுதிவரை போராடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக போர் எனத் தொடங்கிவிட்டால் அதில் யாராலும் வெல்ல முடியாது எனக் குறிப்பிட்டுள்ள சீனா, வரி விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவின் நிலைப்பாடு
சீனா இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு மிக சிம்பிள். அதாவது அமெரிக்கா இப்போது ஒருதலைபட்சமான நடவடிக்கை மூலம் உலக நாடுகளை மிரட்டி வருகிறது.. அதற்கு எதிராக நிற்கும் துணிச்சலான நாடாகச் சீனா தன்னை காட்டிக்கொள்கிறது. அதை உணர்த்தும் வகையிலேயே இறுதி வரை போராட ரெடி என்றும் வர்த்தக போர் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனா கூறியிருக்கிறது.
இது தொடர்பாக சீன ஆளும் தரப்பு அதிகாரிகள் கூறுகையில், "சீனா மீதான அமெரிக்காவின் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதேநேரம் இந்த வரியால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது. அமெரிக்கா வர்த்தக போரை கையில் எடுப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே 2017இல் அமெரிக்கா (முதல்) வர்த்தகப் போரை ஆரம்பித்தது. (அப்போதும் டிரம்ப் தான் சீனா மீது வரிகளை அறிவித்திருந்தார்)
அப்போது அமெரிக்கா எவ்வளவு நடவடிக்கை எடுத்த போதிலும் அழுத்தம் கொடுத்த போதிலும் அதைத் தாண்டி நாம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து முன்னேறி வருகிறோம். எவ்வளவு அழுத்தம் வருகிறதோ.. அதே வேகத்தில் வளர்த்து வருகிறோம். அது வரும் காலங்களிலும் நிச்சயம் தொடரும்" என்பதோடு சீன அதிகாரிகள் நிறுத்திக் கொண்டனர்.

ஒட்டுமொத்த வரி
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சமயத்திலேயே சீனா மீது டிரம்ப் வரிகளை அறிவித்திருந்தார். கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரி என 34% வரியை அறிவித்தார். இதைச் சேர்த்தால் சீனப் பொருட்கள் மீதான சராசரி அமெரிக்க வரி ஏற்கனவே 76 சதவீதமாக இருக்கிறது. இது தொடர்பாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் மூத்த பொருளாதார நிபுணர் சூ தியான்சென் கூறுகையில், "சீனா மீதான அமெரிக்காவின் வரி ஏற்கனவே 60%க்கு மேல் இருக்கிறது. இதனால் கூடுதலாக வரி, அது 50 சதவீதம் அல்லது 500 சதவீதம் என எவ்வளவு சதவீதமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை.
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க சீனாவுக்கு இப்போது சில ஆப்ஷன்கள் உள்ளன. முதலில் அமெரிக்க விவசாய கொள்முதலைச் சீனா நிறுத்த வேண்டும். பிறகு, அமெரிக்காவுக்கு இணையாக வரிகளை அறிவிக்க வேண்டும். தொடர்ந்து ரேர் எர்த் உலோகங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கலாம். இது நிச்சயம் அமெரிக்காவுக்கு செக் வைப்பதாக இருக்கும்" என்றார்.

யாருக்கு லாபம்?
அதேநேரம் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான இந்த வர்த்தக போர் மூலம் இந்தியாவுக்கு ஒரு வகையில் நன்மை. டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியில் இந்தியாவும் இருக்கிறது என்ற போதிலும் சீனா உடன் ஒப்பிடும்போது இந்தியா மீதான வரி குறைவுதான். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி இப்போது 26%ஆக மட்டுமே இருக்கிறது. மேலும், அமெரிக்கா உடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் போடவும் இந்தியா இப்போது தீவிரமாக முயன்று வருகிறது.
ஏற்கனவே கொரோனாவுக்கு பிறகு சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வந்தன. அதாவது சீனாவுக்கு வெளியே தங்கள் உற்பத்தி மையங்களை விரிவுபடுத்த ஆப்பிள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விரும்பின. அப்போதே அவர்களின் முதல் சாய்ஸாக இந்தியா இருந்தது. இப்போது டிரம்ப் வரியும் சீனா உட்பட மற்ற போட்டி நாடுகளை விட இந்தியாவில் குறைவாகவே இருப்பதால் இது இந்திய ஏற்றுமதிக்கு நன்மை தருவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications