நாளை இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்? அமெரிக்க அதிபர் தேர்தலால் எந்த துறை பங்குகள் அடி வாங்கும்
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வு செய்ய இப்போது தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில், நாளை மதியத்திற்குள் யார் வெல்ல வாய்ப்புள்ளது என்பது தெரிய வரும். இதற்கிடையே அதிபர் தேர்தல் முடிவைப் பொறுத்து பங்குச்சந்தை எப்படி மாறும்.. இதனால் இந்தியப் பங்குச்சந்தைகள் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் நடந்தாலும் இதன் தாக்கம் என்பது சர்வதேச அளவில் இருக்கும். தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே சர்வதேச பங்குச்சந்தைகள் இருக்கும். தேர்தலுக்கு முன்னதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை வாங்கி குவித்து வருகிறார்கள்.
அதிபர் தேர்தல்: அதிலும் தற்போது சீனாவுடன் பதற்றம், மத்திய கிழக்கில் மோதல் என்று உலகில் ஏற்கனவே இக்கட்டான சூழல் இருக்கும் நிலையில், இந்த அதிபர் தேர்தல் நடக்கிறது. புதிதாக வரும் அரசு பொருளாதாரம், குடியேற்றம், சர்வதேச உறவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இரு தலைவர்களும் என்ன பாலிசியை கொண்டு வரப் போகிறார்கள் என்பதை முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள்.
கடந்த கால டேட்டாவை வைத்துப் பார்க்கும்போது, ஜனநாயக கட்சி ஆட்சியில் தான் பொருளாதாரம் சிறப்பாக இருந்துள்ளது. 1927 முதல் 2015 வரையிலான டேட்டாவை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஜனநாயக கட்சித் தலைவர்கள் அதிபராக இருந்த போது ஜிடிபி வளர்ச்சி 4.86%ஆக இருந்துள்ளது. அதேநேரம், குடியரசு கட்சித் தலைவர்கள் அதிபராக இருந்த போது ஜிடிபி வளர்ச்சி வெறும் 1.7%ஆக மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி: தற்போது வரை வெளியாகியுள்ள எல்லா கருத்துக்கணிப்புகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்விங் மாகாணங்களில் டிரம்ப் கை ஓங்கி இருப்பதால் டிரம்ப் வெல்லவே வாய்ப்பு அதிகம் என்று மார்கெட் நம்புகிறது. இதனால் ஒரு வேலை கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அது பங்குச்சந்தையில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
டிரம்ப் வென்றால் என்ன நடக்கும்: மறுபுறம் டிரம்ப் தேர்தலில் வென்றால் பங்குகள் விலை உயரும். அதேநேரம் Bond எனப்படும் சந்தை பத்திரங்களின் மதிப்பு குறையும். அதேநேரம் டிரம்ப் வெல்லும் போது சந்தையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றே பாங்க் ஆஃப் இத்தாலியின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், டிரம்ப் வென்றால் எண்ணெய் விலையும் குறையும் என்றும் இது சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜனநாயக கட்சி வென்றால் பங்குச்சந்தை பெரியளவில் அதிகரிக்காது. ஏனென்றால் அவர்கள் தற்போதுள்ள பாலிசியை தொடர்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் குடியரசு கட்சி வென்றால் புதிய அரசின் பாலிசியை பொறுத்து பங்குச்சந்தை இருக்கும்.
இந்தியப் பங்குகள்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் என்பது நிச்சயம் இந்தியப் பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் பல இந்திய நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஐடி, ஃபார்மா, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் மற்றும் தொழில்துறை தொடர்புடைய நிறுவனங்களின் விலை என்பது அமெரிக்கத் தேர்தல் முடிவைப் பொறுத்து மாறும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications