50% வரி விவகாரத்தில்.. கடைசியில் இதுதான் நடக்க போகுது! டிரம்புக்கு நெருக்கமான அதிகாரி சொன்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்த 50 சதவீத வரியானது இன்று முதல் அமலுக்கு வாந்துள்ளது. இதனால், இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 50 சதவிகித வரி விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே கடைசியில் இது தான் நடக்கும் என டிரம்புக்கு நெருக்கமான அதிகாரி ஸ்காட் பெசண்ட் என்பவர் கணித்துள்ளார். அவர் கூறியதை இங்கு பார்க்கலாம்.
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த கடுமையான வரியால், இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் தொழில் துறையை பாதிப்பதோடு, வேலையிழப்பையும் ஏற்படுத்தும். இதனால் டிரம்ப் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியா அமெரிக்கா வர்த்தக போர்
டிரம்பின் இந்த வரியால் நம் நாட்டில் ஜவுளித்துறை, இறால், தோல், ரத்தினம், தங்க நகைகள் உள்பட பல தொழில்கள் பாதிக்கப்படும் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டின் திருப்பூர், குஜராத்தின் சூரத் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த துறைகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும்.
நம் நாட்டின் பொருட்கள் செல்லாத நிலையில், வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், துருக்கி, நேபாளம் மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகள் தங்களின் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு அனுப்பி பலன் பெறலாம் என்று அத்துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க கருவூல துறை செயலரும், டிரம்புக்கு நெருக்கமானவருமான ஸ்காட் பெசண்ட், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஒன்றாக இணைந்து செயல்படுவோம்
வரி விதிப்பு விவகாரம் குறித்தும் இவர் பேசியுள்ளார். இது தொடர்பாக பெசண்ட் கூறியிருப்பதாவது:- "இந்தியா - அமெரிக்கா இடையே மே அல்லது ஜூன் மாதம் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு விடும் என்று நினைத்தேன். இந்தியாவுடன் அமெரிக்கா பெரும் வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா பெரிய அளவில் வரியை விதித்து வருகிறது.
இந்தியா எங்களுக்கு விற்பனை செய்கிறது. ஆனால் அவர்கள் மிகப்பெரிய அளவில் வரியை விதிக்கிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகும். எனவே, கடைசியில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றே நான் நினைக்கிறேன்," என்றார்.
மோடியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
"இந்தியா ரூபாயில் வர்த்தகம் செய்யுமா, அல்லது ப்ரிக்ஸ் நாடுகளுடன் வர்த்தகம் செய்யுமா?" என்று அவரிடம் கேட்ட போது, "இது போன்ற யூகங்களை நான் நிராகரிக்கிறேன். பிரதமர் மோடிக்கும், டிரம்புக்கும் உயர் மட்ட அளவில் நல்ல உறவு உள்ளது. எனவே இது வெறும் ரஷ்ய எண்ணெய் சம்பந்தப்பட்டது இல்லை. கொஞ்சம் சிக்கலான விஷயம்" என்றார்.
அமெரிக்காவின் இந்த வரி அழுத்தத்திற்கு இந்தியா பணியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வரி மோதலில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை இந்தியா எடுக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications