ஐநாவில் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்ட ஷெபாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் காஷ்மீர் விவகாரம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை தேவையின்றி இழுத்து பேசியதோடு, இந்தியாவுடன் நடந்த சண்டையில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார். இதற்கு இந்தியா சூட்டோடு சூடாக தக்க பதிலடியை ஐநாவில் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் வழக்கம் போல தனது அபாண்டமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டார். அதேபோல காஷ்மீர் விவகாரத்தையும் இழுத்து பேசினார். இந்த ஆண்டு துவக்கத்தில் அத்துமீறிய செயலை தங்கள் நாடு எதிர்கொண்டதாக பேசியிருந்தார்.

பாகிஸ்தானின் அபத்தமான நாடகங்கள்
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் பேசிய கருத்துக்கு இந்தியா நேற்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஷெரீப்பின் கருத்துகளை "அபத்தமான நாடகம்" என்று நிராகரித்த இந்தியா, "எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஐநாவுக்கான இந்திய தூதர், பெடல் கஹ்லோட் தனது பேச்சில், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "இன்று காலை பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகங்களை இந்த சபை கண்டது. அவர் மீண்டும் பயங்கரவாதத்தை புகழ்ந்து பேசினார். பயங்கரவாதம் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக உள்ளது.
உண்மைகளை மறைக்க முடியாது
எந்த நாடகமும், எந்த பொய்களும் உண்மைகளை மறைக்க முடியாது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் படுகொலைக்கு காரணமான ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் காப்பாற்றியது.
பயங்கரவாதத்தைப் பரப்புவதிலும், ஏற்றுமதி செய்வதிலும் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ள ஒரு நாடு, மிகவும் கேலிக்கூத்தான கதைகளை முன்வைப்பதில் வெட்கப்படுவதில்லை. ஒசாமா பின் லாடனை ஒரு தசாப்த காலமாக அடைக்கலம் கொடுத்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கூட்டாளியாக நடித்தாலும் இது நடந்தது.
போரை நிறுத்துமாறு கெஞ்சியது
பயங்கரவாத முகாம்களை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக அதன் அமைச்சர்கள் அண்மையில் ஒப்புக்கொண்டனர். இந்த இருமுகம் இந்த முறை அதன் பிரதமரின் மட்டத்தில் தொடர்வது ஆச்சரியமல்ல" என்றார்.
அதேபோல, "போரில் நாங்கள் வென்றுவிட்டோம். அதேவேளையில் இப்போது எங்கள் பகுதியில் அமைதியை வெல்ல முயல்கிறோம்" என்று ஷெஹபாஸ் ஷெரீப் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, "கடந்த மே 10 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம், சண்டையை நிறுத்துமாறு நேரடியாக எங்களிடம் கெஞ்சியது.
பாகிஸ்தானின் சேதம் அடைந்த ரன்வேக்கள் மற்றும் விமானம் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. சேதம் அடைந்த ரன்வேக்கள் மற்றும் எரிந்து சாம்பலான ஹேங்கர்கள் வெற்றி போல பாகிஸ்தானுக்கு தெரிகிறது. பாகிஸ்தான் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கட்டும்" என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications