இனி யாராலும் வாலாட்ட முடியாது.. இந்தியாவுக்கு வரும் அதிநவீன டிரோன்கள்! இறுதி ஒப்புதலை தந்த அமெரிக்கா
வாஷிங்டன்: சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் MQ-98 சீ கார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா இறுதி ஒப்புதலைக் கொடுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவு இருந்து வருகிறது. சர்வதேச அரங்கில் பல நேரங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்துள்ளது.

அதாவது இப்போது அமெரிக்கா ரஷ்யா என இரு நாடுகளிடமும் இப்போது இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இப்படி இரு நாடுகளிடமும் நல்லுறவைக் கொண்டுள்ள வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இதற்கு முன்பு காலங்காலமாக ரஷ்யா தான் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இருந்தது. இதனால் இந்தியாவின் ராணுவத்தில் பெரும்பாலும் சோவியத் ஆயுதங்களே இருக்கும். ஆனால், இந்த நிலை இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் மாற தொடங்கியது. அமெரிக்காவிடம் இருந்தும் பல முக்கிய ஆயுதங்களை இந்தியா வாங்க ஆரம்பித்துள்ளது.
டிரோன்கள்: இதற்கிடையே சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் MQ-98 சீ கார்டியன் ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத் தேவையான அனுமதியை அமெரிக்காவின் பாதுகாப்பு செக்யூரிட்டி ஒத்துழைப்பு அமைப்பு வழங்கியுள்ளது. இன்றே இந்த விற்பனை நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவிடம் இருந்து 31 MQ-9B ஸ்கை கார்டியன் ட்ரோன்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டிய நிலையில், அதற்கு பைடன் அரசும் ஒப்புதல் கொடுத்தது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்தான மிக முக்கியமான ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது. இந்த விற்பனைக்கான ஒப்புதலைத் தான் இப்போது அமெரிக்க பாதுகாப்பு செக்யூரிட்டி ஒத்துழைப்பு அமைப்பு வழங்கியுள்ளது.
அறிவிப்பு: இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இதன் மூலம் அமெரிக்க-இந்திய உறவு வலுப்படும். இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை வலுப்படுத்தும். இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.
இந்த விற்பனை என்பது இந்தியாவின் ஆளில்லா கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேம்படுத்தும். இது தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவின் திறனை மேம்படுத்தும். இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த டிரோன்களை வாங்கி இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
6 ஆண்டு பேச்சுவார்த்தை: இந்த டிரோன்களை வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இறுதியில் பிரதமர் மோடி கடந்தாண்டு அமெரிக்கா சென்ற போது இந்த 3.99 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் இந்த 31 டிரோன்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் பயன்படுத்தப்படும்.
அமெரிக்கா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொலை செய்ய இந்திய அதிகாரிகள் முயன்றதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதனால் இந்த டிரோன் ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா இந்த டிரோன் டீலுக்கு அனுமதி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications