ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. அமெரிக்காவில் இருந்து வந்த குரல்.. இந்திய வம்சாவளி எம்.பி ஆவேசம்!
வாஷிங்டன்: அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோ கன்னா, ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியைச் சேர்த்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமனா புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை 4 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் தீர்ப்பு வெளியானது. ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனினும், ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

எம்.பி பதவி பறிப்பு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவியும் நேற்று பறிக்கப்பட்டது. குற்ற வழக்கில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்ற விதி உள்ளது.

பிரிவு 8-ன் கீழ்
இந்த விதியின் படி ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை பறித்து லோக்சபா செயலகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக லோக்சபா செயலகம் பிறப்பித்த உத்தரவில், சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் விளைவாக வயநாடு எம்.பி ராகுல் காந்தி, தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (e) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய வம்சாவளி அதிருப்தி
குஜராத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி ரோ கன்னா, ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆழமான துரோகம்
ரோ கன்னா வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது (தகுதி நீக்கம்) செய்யப்பட்டது காந்திய தத்துவத்திற்கும் இந்தியாவின் மதிப்புகளுக்கும் செய்த ஆழமான துரோகம். எனது தாத்தா பல ஆண்டுகளாக சிறையில் தியாகம் செய்தது இதற்காக கிடையாது" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பியான ரொ கன்னா சிலிக்கான் வாலி தொகுதியில் இருந்து அமெரிக்க பிரநிதிகள் சபையில் உறுப்பினராக உள்ளார்.












Click it and Unblock the Notifications