"மும்பை ரோடுனு நினைச்சியா?" அமெரிக்காவில் தவறான இடத்தில் யூ டர்ன் போட்ட இந்தியர்.. 3 பேர் மரணம்!
வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஓட்டிச் சென்ற டிரக் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 அமெரிக்கர்கள் உயிரிழந்த நிலையில், இது பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த இந்தியரைக் குறிவைத்து இனவெறி ரீதியாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மறுபுறம் இந்த விபத்தைத் தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை டிரம்ப் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பல கோடி பேர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். ஐடி, டாக்டர் என நல்ல வேலையில் இருப்போர் சில லட்சம் என்றால் இதர வேலைகளிலும் பல கோடி பேர் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களில் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். இதற்கிடையே இந்திய டிரக் டிரைவர் செய்த ஒரு தவறால் அங்கு மிக மோசமான விபத்து நடந்துள்ளது.

தவறான இடத்தில் யூ டர்ன்
அதாவது அமெரிக்காவின் புளோரிடா நெடுஞ்சாலையில் டிரக் தவறான இடத்தில் யூ டர்ன் போட்டுள்ளது. திடீரென அந்த டிரக் யூ டர்ன் போட்டதால் பின்னால் வந்த கார் அதன் மீது மோதியது. இதில் காரில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் செயின்ட் லூசி கவுண்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
அந்த நெடுஞ்சாலையின் வலதுபுறப் பாதையில் இருந்த டிரக் ஒரு இடத்தில் யூ டர்ன் போட்டுள்ளது. இருப்பினும், அந்த இடத்தில் பொதுமக்கள் யூ டர்ன் போட அனுமதி இல்லை. போலீசார், தீயணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டுமே அங்கு யூ டர்ன் போட அனுமதி இருக்கிறது. ஆனால், இந்த டிரக் அங்கு யூ டர்ன் போட்டதே விபத்திற்குக் காரணமாக இருந்துள்ளது.
மூவர் உயிரிழப்பு
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த செயின்ட் லூசி தீயணைப்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், காரில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இதில் விஷயம் என்னவென்றால் அந்த டிரக்கை ஓட்டியவர் ஹர்ஜிந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தவறான இடத்தில் யூ டர்ன் போட்டதே விபத்திற்குக் காரணமாக இருந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க போலீசார் ஹர்ஜிந்தர் சிங்கை செய்து செய்தனர். இந்தியரான ஹர்ஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் நெட்டிசன்கள் பல்வேறு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
மும்பை போல
ஒரு சில நெட்டிசன்கள், "மும்பையைப் போல எங்கு வேண்டுமானாலும் யூ டர்ன் போடலாம் என இவர் நினைத்துக் கொண்டார் போல.." என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் இனவெறி ரீதியான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். அவர் செய்த தவறால் விபத்து நடந்தது என்றாலும் கூட மோசமான இனவெறி கருத்துகளை சொல்வது நியாயம் இல்லை என்று சில கமெண்டுகளையும் பார்க்க முடிகிறது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஹர்ஜிந்தர் சிங் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்தது தெரிய வந்துள்ளது. ஹர்ஜிந்தர் சிங் கடந்த 2018 செப்டம்பரில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்துள்ளார். இருப்பினும் அப்போதே கலிபோர்னியா எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.
சட்டவிரோதமாக வந்தவர்
இதையடுத்து சில காலம் சிறையில் இருந்த அவர் 2019 ஜனவரியில் $5,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அன்று முதல் அவரது குடிவரவு வழக்கு நடந்து வருகிறது. தொடர்ந்து அவர் அமெரிக்காவில் டிரக் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் கார் மீது எந்தவொரு தவறும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக அந்தச் சாலையில் டிராபிக் மொத்தமாக முடங்கியது.
மேலும், ஹர்ஜிந்தர் சிங்கிற்கு ஆங்கிலம் முறையாகத் தெரியவில்லையாம். போலீசார் கேட்ட கேள்விகளில் 12ல் 2க்கு மட்டுமே அவர் பதிலளித்துள்ளார். மேலும், சாலையில் உள்ள டிராபிக் சிக்னல் குறித்துக் கேட்கப்பட்ட போதும் பல சிக்னல்களுக்கு என்ன அர்த்தம் என்பதே அவருக்குத் தெரியவில்லையாம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டிரக் ஓட்டுநர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications