ஒரு கோடி சம்பளம் பத்தல.. இந்தியரின் பிஸ்னஸ் விசாவை சம்பந்தமே இல்லாமல் நிராகரித்த அமெரிக்க அதிகாரி!
சென்னை: டிரம்ப் அதிபரான பிறகு, கடந்த 10 மாதங்களாகவே அமெரிக்காவுக்கான விசா கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்கள் பலரும் இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் கை நிறையச் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு, வெறும் ஒரே நிமிடத்தில் பிஸ்னஸ் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மட்டுமில்லை.. வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதிலேயே கூட பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. விசா வழங்குவதில் கெடுபிடி அதிகரித்துள்ளது.

விசா நிராகரிப்பு
பலரும் சம்பந்தமே இல்லாமல் தங்கள் விசா நிராகரிக்கப்பட்டதாக இணையத்தில் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் B1/B2 விசா கோரி விண்ணப்பித்த இந்திய ஐடி ஊழியர் ஒருவரின் விண்ணப்பம் வெறும் ஒரு நிமிடத்திற்குள் நிராகரிக்கப்பட்டது.
அவர் அமெரிக்காவில் ஒரு முக்கியமான நிகழ்வில் பங்கேற்க இருந்தார். இருப்பினும், அவரது விண்ணப்பம் ஒரே நிமிடத்தில் நிராகரிக்கப்பட்டதாம். இது தொடர்பாக அந்த நபர் தனது அனுபவத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மூன்றே கேள்விகள்
இது தொடர்பாக அவர் தனது ரெட்டிட் பக்கத்தில், "இன்று அமெரிக்கத் தூதரகத்தில் எனது B1/B2 விசா நேர்காணல் நடந்தது. வெறும் 3 கேள்விகளைத் தான் கேட்டார்கள்.. ஆனால், ஒரே நிமிடத்திற்குள்ளேயே எனது விசாவை நிராகரித்துவிட்டனர். என்ன தவறு நடந்தது, அடுத்த முறை எப்படிச் சரி செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதரக அதிகாரி அவரிடம் 3 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார். முதலில் எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், அட்லாண்டாவில் நடைபெறும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார். தான் ஒரு நிறுவனத்தில் மூத்த டீம் லீடராக பணிபுரிவதால் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது அவசியம் என கூறியிருக்கிறார்.
மொத்தமே ஒரு நிமிடம் தான்
அடுத்து அந்த அமெரிக்க அதிகாரி, இதற்கு முன்பு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்களா என கேட்டுள்ளார். இதற்கு முன்பு பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அந்த நபர், இதற்கு முன்பு லிதுவேனியா, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளதாகக் கூறியிருக்கிறார். கடைசியாக அமெரிக்காவில் வேறு எதாவது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற அந்த அதிகாரி கேட்டதற்கு "இல்லை" என்று பதிலளித்துள்ளார். மொத்தமாகவே இந்த நேர்காணல் ஒரு நிமிடம் தான் நடந்துள்ளது.
நிராகரிப்பு
இதை வைத்துப் பார்க்கும்போது அந்த நபர் மூன்று கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்துள்ளார். எதற்காகச் செல்கிறேன் என்பதற்கு வலுவான காரணம் இருக்கிறது. இதற்கு முன்பும் அவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். மேலும், அமெரிக்காவில் வேறு யாரும் இல்லை என்பதால் அங்கேயே தங்கவும் முடியாது. எனவே, அவருக்கான விசாவை அனுமதித்தே இருக்க வேண்டும். இருப்பினும், அந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். அவருக்கு செக்ஷன் 214(b) நிராகரிப்பு சீட்டை கொடுத்துள்ளார்.
லாஜிக் இல்லை
இது தனக்கு ஆச்சரியத்தை அளித்தாக அவர் குறிப்பிடுகிறார். ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பாதித்து நிலையான வேலையில் இருக்கும் தனக்கு எந்த லாஜிக்கின்படி விசா மறுக்கப்பட்டது எனப் புரியவில்லை என்கிறார் அவர். மேலும், தனக்கு 8 மாதத்தில் குழந்தை இருப்பதால் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதில் அர்த்தமே இல்லை என்றும் அவர் பதிவிட்டார்.
பிஸ்னஸ் அல்லது சுற்றுலா விசாவில் அமெரிக்கா செல்வோர் குறிப்பிட்ட நாட்களில் திரும்பிவிட வேண்டும். இருப்பினும், விண்ணப்பிக்கும் நபர் நிரந்தரமாக அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார் என்ற தூதரக அதிகாரி நினைத்தால் இந்த செக்ஷன் 214(b) சீட்டை வழங்குவார். இவருக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டதே இணையத்தில் விவாத்ததை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications