"3 மடங்கு ஏறிய விலை.." அரிசி பற்றாக்குறை! ஏற்றுமதி தடையால் பரிதவிக்கும் இந்தியர்கள்! அடுத்து என்ன
வாஷிங்டன்: இந்தியா எடுத்த ஒற்றை முடிவால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு சூப்பர் மார்கெட்களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகளவில் அரிசி ஏற்றுமதியில் நாம் முக்கிய இடத்தில் இருக்கிறோம். நமது இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் செட்டிலாகி உள்ள நிலையில், அவர்களின் தேவைக்கு அரிசி உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஜப்பான், இலங்கை எனப் பல நாடுகளில் பரவலாக அரிசியைச் சாப்பிடும் நடைமுறை இருக்கவே செய்கிறது. இதில் ஏற்றுமதி சந்தையில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது.

அரிசி: இதற்கிடையே விலைவாசியைக் கட்டுப்படுத்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளின் ஏற்றுமதியைத் தடை விதித்துக் கடந்த ஜூலை 20ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இது உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த அறிவிப்பு கவலையில் ஆழ்த்தியது. இந்தியாவின் இந்த தடையால் உலக சந்தையில் அரிசியின் அளவு 5இல் ஒரு பங்கு வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசியின் விலையும் மெல்ல உயர ஆரம்பித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், உள்நாட்டில் அரிசி அதிகளவில் கிடைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். இருப்பினும், இந்தியாவின் இந்த முடிவு வெளிநாடுகளின் அரிசிக்கு கடும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நிலை: அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அரிசி வாங்குவதே பெரும்பாடாக இருக்கிறதாம். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வசிக்கும் அருணா, இது குறித்துக் கூறுகையில், "இன்று ஒரே நாளில் மட்டும் நான் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்குச் சென்றேன். காலை 9 மணிக்கு நான் அரிசி வாங்க தேட ஆரம்பித்தேன்... மாலை 4 மணி வரை எனக்குக் கிடைக்கவில்லை. பல கடைகளுக்குச் சென்ற பிறகு கடைசியில் ஒரு கடையில் மட்டும் அரிசி இருந்தது. அதுவும் 3 மடங்கு அதிக விலையில்.." என்று அவர் தெரிவித்தார்.
அரிசி தடை எப்போது வரை தொடரும் எனத் தெரியாததால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அரிசியை வாங்கக் குவிந்தனர்.. இதனால் அங்குப் பல சூப்பர் மார்கெட்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் குறைவான ஸ்டாக் மட்டுமே இருந்த நிலையில், அரிசி பையை வாங்க மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குவிந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கட்டுப்பாடு: அமெரிக்காவில் ஏதோ ஒரு இடத்தில் மட்டும் இந்த நிலை இல்லை. அங்கு பெரும்பாலான பகுதிகளில் இதை சூழ்நிலைதான். பல இடங்களில் குடும்பத்தினருக்கு ஒரு அரிசி பை மட்டும் வழங்கப்படுகிறது. அந்தளவுக்கு மக்கள் பதற்றத்தால் அரிசியை வாங்கி குவித்து வருகின்றனர். மேலும், பாஸ்மதி அரிசிக்குத் தடை விதிக்கப்படவில்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கையாக அதையும் வாங்கி குவிப்பதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நமது நாட்டில் மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் தடை உலகெங்கும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications