சீனா பக்கம் சாயும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பதற்கு புது கண்டிஷன்! டிரம்புக்கு பெரிய தலைவலி
தெஹ்ரான்: ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை நிபந்தனைகளுடன் அனுமதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த வழியாக அனுமதிக்கப்படும் கப்பல்கள் சீனாவின் யுவானில் மட்டுமே எண்ணெய் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற கண்டிஷனை பூர்த்தி செய்தால் குறிப்பிட்ட அளவு கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாம் என ஈரான் ஆலோசித்து வருகிறதாம். ஈரானின் இந்த புதிய முடிவு டிரம்பை மேலும் டென்ஷனாக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் மூன்றாவது வாரத்தை தொட்டுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக கூறி அந்த நாடு மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.

பழி தீர்க்காமல் விட மாட்டோம்
இதனால், கோபம் அடைந்த ஈரான், பழி தீர்க்காமல் விட மாட்டோம் என்று இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தாக்குதல் நீடிப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த போருக்கு நடுவே, ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகின் மொத்த வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி இடையே நடைபெறுவதால் உலக அளவில் வர்த்தக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக விலை உயர்வை சந்தித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்
ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால் பாதிக்கப்பட்ட நாடுகள் அப்பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் இந்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சீனா இதனை மறுத்தது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சில எண்ணெய் டேங்கர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருகிறது. ஆனால் அந்த டேங்கர்கள் எடுத்துச் செல்லும் எண்ணெய், சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்யப்பட வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாம். ஹர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், திறப்பதற்கு இப்படியான கண்டிஷனை போட ஈரான் பரிசிலீத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஈரான் அதிகாரி கூறுகையில், " உலகின் முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றாக உள்ள இந்த நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை ஈரான் உருவாக்கி வருகிறது" என்று கூறினார்.
புதிய திட்டத்தை ஈரான் உருவாக்கி வருகிறது
இது தொடர்பாக ஈரான் அதிகாரி கூறுகையில், "உலகின் முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றாக உள்ள இந்த நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை ஈரான் உருவாக்கி வருகிறது" என்று கூறினார்.
வழக்கமாக சர்வதேச எண்ணெய் பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலர்களில் நடைபெறுகின்றன. ஆனால், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிகள் மட்டும் விதிவிலக்காக ரூபிள் அல்லது சீன யுவானில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. தற்போது யுவானில் வர்த்தகம் நடைபெற்றால் எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க பரிசீலிப்பதாக ஈரான் கூறியுள்ளது சர்வதேச எண்ணெய் சந்தையில் புதிய மாற்றம் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பை கோப்பபடுத்தும் நடவடிக்கை
சீனா, ஈரானுடன் நட்புறவை பேணி வருகிறது. மேலும் எரிசக்தி விநியோகத்திற்கும் சீனா, மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா, தனது எண்ணெய் தேவையில் சுமார் 45 சதவீதத்தை ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக பெறுகிறது. இதனால், அந்த கடல் பாதை அதன் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானின் எண்ணெய் மையமான கார்க் தீவு அருகே உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்கா கடுமையாக குண்டுவீசி தாக்கியதாக தெரிவித்தார். மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படை விரைவில் பாதுகாப்பு வழங்கத் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்த சூழலில்தான் ஈரான் சீனா கரன்சியில் வர்த்தகம் செய்தால் எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க தயார் என்று கூறியுள்ளது டிரம்பை மேலும் கோபப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications