புடின் போர் குற்றவாளியா? போர் குற்றவாளிகள் என நிர்ணயிப்பது யார்? எப்படி தண்டிக்கப்படுவார்கள்?
வாஷிங்டன்: ஒருவரை போர் குற்றவாளி என வாய்மொழியில் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், போர்குற்றவாளி என ஒருவரை அறிவிப்பது சாதாரணமான விசயம் அல்ல. அதற்கென சில வழிமுறைகளும், கோட்பாடுகளும் உள்ளன.
அவை நிரூபிக்கப்பட்டால் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். நேற்று உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என்று விமர்சித்தார்.
உக்ரைனின் மருத்துவமனைகள், பிரவச வார்டுகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டி அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரும் தமிழர்கள்
அமெரிக்க செனட் சபையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என அறிவித்து ஒருமித்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல் இலங்கை தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த மகிந்தா ராஜபக்ஷேவையும் ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

போர் குற்றவாளி என அறிவிக்காத வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் பைடன், விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என்று கூறினாலும், அமெரிக்க அரசின் தலைமையகமான வெள்ளை மாளிகை புதினை போர் குற்றவாளி என்று குறிப்பிடுவதில்லை. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சகி, "அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் குறித்து தெரிவித்த கருத்து அவரது உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன." என்றார்.

ஐ.நா. சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் கருத்து
"தெளிவாக சொல்லப்போனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளிதான். ஆனால், அமெரிக்க அதிபர் அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்து உள்ளார்" எனக்கூறுகிறார் சியார் லியோனுக்கான ஐ.நா. சிறப்பு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் டேவிட் க்ரேன்.

விசாரணையில் இறங்கிய உலக நாடுகள்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் போர் குற்றவாளியா என்பதை அறிய அமெரிக்கா உள்ளிட்ட 45 உலக நாடுகள் ஒன்றாக இணைந்து விசாரணையில் இறங்கி இருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் போர் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து சர்வதேச போர் விதிகளை புதின் மீறினாரா? மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து அந்நாடுகள் விசாரித்து வருகின்றன. அதேபோல் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நெதர்லாந்தை சேர்ந்த சுயாதின அமைப்பு ஒன்று ரஷ்யா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

போர் குற்ற சட்டங்கள் என்ன?
உலக தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதப்போர் விதிகளை மீறியவர்கள் போர் குற்றவாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இந்த விதிகள் எப்படி போர் சமயத்தில் ஒரு நாடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விதிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. இவை போர்களில் பங்கேற்காத மக்களையும், சண்டையிட முடியாத மருத்துவர்கள், செவிலியர்களையும், படுகாயமடைந்த ராணுவ வீரர்கள், கைதிகளையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டவை. அதேபோல் போர்களில் எந்தமாதிரியான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும்? எதை தடுக்க வேண்டும் என்பனவற்றையும் விதிகள் தெரிவிக்கின்றன.

எந்த மாதிரியான குற்றம் செய்தவர் போர் குற்றவாளி?
வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து கொலை செய்வது, எதிரி நாட்டு படையை விட பன்மடங்கு படைபலத்துடன் சண்டையிடுவது, தாக்குதல்களில் இருந்து தப்பிக்க மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்துவது, பணயக் கைதிகளை பிடித்து வைப்பது, ராணுவ உதவியுடன் கொலை செய்வது மற்றும் பேரழிவை ஏற்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு அவை நிரூபிக்கப்பட்டால் அவர் போர் குற்றவாளி என அறிவிக்கப்படுவார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்கு
இதுபோன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாடுகளின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தும். மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட தாக்குதல்கள், பொதுமக்களை குறிவைத்து நேரடியாக நடத்தப்படும் தாக்குதல்கள், கொலை, இன அழிப்பு, கட்டாய இடமாற்றம், சித்திரவதை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபட்டது உறுதியானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும்.

நீதியை பெறுவதற்கு என்ன வழி?
போர் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர மொத்தம் 4 வழிகள் உள்ளன.
1. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்,
2. ஐக்கிய நாடுகள் சபை தனது விசாரணை ஆணையத்தை சர்வதேச போர் குற்ற முகமைக்கு மாற்றலாம்.
3. நேட்டோ, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் இதற்காக தனியாக விசாரணை நீதிமன்றங்களை அமைக்கலாம்.
4. ஜெர்மனி போல் தனி நாடுகள் தங்கள் சட்டங்களில் இடம்பெற்றுள்ள போர் குற்ற விதிகளின்படி விசாரிக்கலாம்.
Recommended Video

புதினை விசாரிப்பது எளிதல்ல
இந்த சர்வதேச நீதிமன்றங்களில் ரஷ்யா எதற்கு கட்டுப்படுகிறது என்பது தொடர்பான முறையான ஆதாரங்கள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ரஷ்யா யாரையும் அனுப்பியது இல்லை. அமெரிக்காவும் அந்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. ஐ.நா அல்லது அதில் இடம்பெற்ற நாடுகளின் கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்படும் நாட்டில் விளாடிமிர் புதினை விசாரணைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது. ஆனால், அதை புதின் ஏற்பாரா என்பது கேள்விக்குறி.












Click it and Unblock the Notifications