இந்தியாவின் மருமகன்.. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் பின்னணி.. மாமனாருக்கு சென்னையுடன் தொடர்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். அதேபோல் அமெரிக்காவின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்றார். இவர் நம் நாட்டின் மருமகன் ஆவார். அதாவது அவரது மனைவி உஷா வான்ஸ் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பதோடு, அவரது குடும்பத்துக்கு சென்னையுடன் நெருங்கிய தொடர்பு என்பது உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதையடுத்து டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2016 முதல் 2020ம் ஆண்டு வரை அவர் அதிபராக செயல்பட்டார். அதன்பிறகு இப்போது மீண்டும் அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நேற்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்றது. அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதில் ஜேடி வான்ஸ் என்பவர் இந்தியாவின் மருமகன் ஆவார். வெளிநாடுகளில் முக்கிய அரசு பதவிகளில் இந்திய வம்சாவளி மற்றும் இந்திய வம்சாவளியின் கணவர், மனைவிகள் உள்ளனர். அதன்படி ஜேடி வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியாவார். அவரது மனைவியின் பெயர் உஷா சிலிக்குரி.
உஷா சிலிக்குரி நம் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உஷா சிலிக்குரி ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா பெயர் ராமசாஸ்திரி சிலிகுரி. இவர் சென்னை ஐஐடியில் பணியாற்றினார். 1959ல் ஐஐடி தொடங்கியபோது அவர் பணி செய்தார். இதற்காக ஆந்திராவின் வட்லூருவை விட்டு அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்து தங்கி பணியாற்றினார்.
இந்த சமயத்தில் தான் 1970 காலக்கட்டத்தில் உஷாவின் பெற்றோர் சென்னையில் இருந்து அமெரிக்காவின் சான்டியாகோவிற்கு சென்றனர். பெற்றோர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும் கூட உஷா சிலிக்குரி அமெரிக்காவில் தான் பிறந்து வளர்ந்தவர். அங்கு சட்டப்படிப்பை படித்தவர். சட்டப்பள்ளியில் உஷா படித்தபோது ஜேடி வான்ஸ் அவருக்கு பழக்கமானார். இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகள் உள்ளனர். இதன்மூலம் ஜேடி வான்ஸ் இந்தியாவின் மருமகன் ஆனார்.
ஜேடி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோரிடம் கிளார்க் ஆக பணியாற்றினார். திருமணமான புதிதில் கணவர் ஜேடி வான்ஸ் குடியரசு கட்சியில் பயணித்தார். ஆனால் உஷா தொடர்ந்து ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக பயணித்தார்.
அதன்பிறகு 2016க்கு பிறகு தான் உஷா தனது நிலைப்பாட்டை மாற்றி ஜனநாயக கட்சியில் இருந்து குடியரசு கட்சி உறுப்பினராக மாறினார். ஜேடி வான்ஸின் அரசியல் வளர்ச்சிக்கு உஷா தற்போது பக்கபலமாக உள்ளார். இத்தகைய சூழலில் தான் குடியரசு கட்சியின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்றுள்ளார்.
துணை அதிபராகி உள்ள ஜேடி வான்ஸின் அரசியல் பின்னணியைபார்த்தால் அவர் தற்போது ஓஹியோவைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டராக உள்ளார். ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பை கடுமையாக எதிர்த்தவர் என்பதோடு வெளிப்படையாக விமர்சித்தவர். சொந்த கட்சியை சேர்ந்தவர், அமெரிக்காவின் அதிபர் என்று பாராமல் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தவர் தான் இந்த ஜேடி வான்ஸ்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு தீமையை ஏற்படுத்தும் நபர், மோசமானவர். அமெரிக்காவின் ஹிட்லர் என வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தவர் தான் ஜேடி வான்ஸ். அதன்பிறகு டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராக மாறி அவருடன் துணை அதிபராக செயல்பட உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications