சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் குவைத்தில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வாஷிங்டன்:சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குவைத் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று குவைத். குவைத்தில் 1960-ஆம் ஆண்டில் இருந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எனினும், சமீப காலமாக நிறைவேற்றப்படுவதில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு 7 பேருக்கு மொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

7 கைதிகளுக்கு மரண தண்டனை
ஆளும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் உள்பட 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு அப்போதே சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் எதிர்ப்புகள் எழுந்து இருந்தன. இதையடுத்து, குவைத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்தில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புகள்
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்புகள், கண்டனத்திற்கு மத்தியிலும் குவைத் மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. கொலைக் குற்றம் உள்பட பல்வேறு குற்றங்களை செய்த 7 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. குவைத்தில் உள்ள மத்திய சிறையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எனினும், மரண தண்டனை எந்த முறையில் நிறைவேற்றப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம்
குவைத் நாட்டை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், சிரிய நாட்டை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் 7 பேர் மரண தண்டனை மூலம் கொல்லப்பட்டு இருக்கின்றனர். குவைத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மரண தண்டனைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. குவைத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த ஐரோப்பிய யூனியன் அதிகாரி மார்கரிடிஸ் சினாஸ் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஐரோப்பிய யூனியன் சம்மன்
இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியனும் மரண தண்டனையை குவைத் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேபோல், பிரஸ்சல்ஸில் உள்ள குவைத் தூதருக்கும் ஐரோப்பிய யூனியன் சம்மன் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விசா இன்றி பயணிக்கும் நாடுகள் பட்டியலில் குவைத் இடம் பெறுவது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. குவைத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்த முன்னெடுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

மரண தண்டனை கொடூரமானது..
அதேபோல், அம்னெஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பும் குவைத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பின் அம்னா குலேலி கூறுகையில், "மரண தண்டனையை நிறைவேற்றுவதை குவைத் அரசு தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும். மரண தண்டனை கொடூரமானது. மனிதாபிமானமற்றது" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications