அண்டார்டிகாவில் திடீரென ஒரு மர்ம கதவு.. உள்ளே ரகசிய சுரங்கம்? உண்மை என்ன! முக்கிய தகவல்
வாஷிங்டன்: அண்டார்டிகாவில் ஜப்பான் ஆய்வு மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே திடீரென ஒரு மர்ம கதவு தோன்றியுள்ளது. இந்த மெகா கதவு அங்கு எதற்காக உள்ளது. இதற்குப் பின்னால் என்ன இருக்கும் என்பது குறித்து நெட்டிசன்கள் பலவித கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது உலகில் இருக்கும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டம் என்றால் அது அண்டார்டிகா தான். அது பனியால் மட்டுமே சூழப்பட்டு ஒரு கண்டமாகும். அங்கு எல்லா இடங்களிலும் பனிக்கட்டிகள் மட்டுமே இருப்பதால் மக்களால் அங்கு வசிக்க முடியாது.

இப்போது ஆய்வாளர்கள் மட்டுமே அண்டார்டிகாவில் வசித்து வருகிறார்கள். ஆய்வுக்காக அங்கு ஒவ்வொரு நாடும் தனித்தனியாக ஆய்வு மையங்களை அமைத்துள்ளன.
மர்ம கதவு: அப்படி தான் கிழக்கு அண்டார்டிகாவில் ஒரு இடத்தில் ஜப்பான் தனது ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. இதை ஷோவா ஆய்வு மையம் என்று அழைக்கிறார்கள். இந்த ஆய்வு நிலையத்திற்கு அருகே தான் நிலையத்திற்கு அருகே பனிக்கட்டியில் திடீரென பெரிய கதவு போல ஏதோ ஒன்று தென்பட்டுள்ளது. இது பார்க்க அப்படியே ஏதோ ஒரு மர்ம கதவு போல இருக்கிறது. இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
முதலில் ரெட்டிட் தளத்தில் தான் இது குறித்த விவாதம் எழுந்தது. கூகுள் மேப்பில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மர்மமான கதவு போன்ற கட்டமைப்பைச் சிலர் கண்டுபிடித்தனர். அண்டார்டிகாவில் உள்ள இந்த பெரிய கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் அங்கு நடந்த எதாவது ஒரு விமானத்தின் கதவாக இது இருக்கும் என்று பதிலளித்தார். மற்றொரு நபர் அண்டார்டிகாவில் ஏற்கனவே சுரங்கங்களில் ரகசிய கட்டமைப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள் போல.. அதற்கான கதவு தான் இது எனப் பதிவிட்டார்.
இதுபோல பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் ஒரு வழியாக இது என்ன என்பது குறித்து ஆய்வாளர்களை ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: பனிப்பாறைகள் குறித்து ஆய்வு செய்யும் நியூகேஸில் பல்கலைக்கழக பேராசிரியர் பெதன் டேவிஸ் இது குறித்துக் கூறுகையில், "நான் படங்களை வைத்து ஆராய்ந்து பார்த்தேன். அது சாதாரண பனிப்பாறை தான்.. வேறு எதுவும் இல்லை. தரையுடன் ஒட்டிப் போய் இருக்கும் பனிப்பாறை உருகும் போது இதுபோல நடக்கும். அங்குப் பல இடங்களில் இதுபோல இருக்கும். செக் செய்தால் உங்களுக்கே தெரியும்" என்றார்.
பின்னணி இதுதான்: அதேபோல இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் மார்ட்டின் கூறுகையில், "இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். நிலத்திற்கு மேல் இருக்கும் பனிப்பாறை உருகும் போது இப்படி நடக்கும். இப்பகுதியில் உள்ள பனி மிகவும் மெல்லியதாக உள்ளது. இதனால் தான் இப்படி நடக்கிறது" என்று விளக்கமளித்துள்ளார்.
இதன் மூலம் அண்டார்டிகாவில் தெரிவது எந்தவொரு மர்ம கதவும் இல்லை.. சாதாரணமாகப் பனி உருகும் நிகழ்வு என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், இதை வைத்துக் கொண்டே நெட்டிசன்கள் சொல்லிய கதைகள் இன்னுமே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications