அடேங்கப்பா.. வெறும் எலிகளை பிடிக்க ரூ.1.28 கோடி சம்பளமாம்.. ஸ்டன் ஆன நெட்டிசன்கள்! என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகள் தொல்லை அதிகரிக்கும் நிலையில், எலிகளைப் பிடிக்க ரூ.1.28 கோடி சம்பளத்தில் ஆட்களை வேலை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
இங்கே நம்ம ஊரில் எலி பிரச்சினை பல இடங்களில் இருக்கவே செய்கிறது. எலிகளால் ரேபீஸ் தொடங்கிப் பல நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்தே வருகின்றனர்.
இதனால் எலிகள் பிரச்சினைகளை ஒழிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளைப் பின்பற்றி வருகின்றன. அதேநேரம் இந்த எலிகள் பிரச்சினை ஏதோ நம்ந ஊருக்கு மட்டுமே இருப்பதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை..

எலி பிரச்சினை: உலகெங்கும் எலிகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் பொருளாதார தலைநகராக அறியப்படும் நியூயார்க்கில் இந்த எலிகள் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அதிலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எலிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
நியூயார்க் நகரில் எப்போதும் தொடரும் இருக்கும் பிரச்சினையாக எலிகள் மாறிவிட்ட போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் எலிகள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக அங்கே உணவகங்கள் இருக்கும் பகுதிகளில் தான் எலிகள் அதிகம் இருந்தன. இருப்பினும், கொரோனா காலத்தில் உணவகங்கள் மூடப்பட்டன. இதனால் எலிகளுக்குக் குறைவான உணவே கிடைத்தன. இதனால் பல எலிகள் தங்கள் நடத்தையை மாற்றின.. புதிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன. இதனால் அப்போது எலிகள் பிரச்சினை குறைந்தன.
என்ன நடந்தது: அவை வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன. அதேநேரம். கொரோனா குறைந்து, உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது, சில எலிகள் தங்கள் புதிய இடங்களில் இருந்துவிட்டன. சில எலிகள் மீண்டும் உணவகங்கள் இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டன. இதனால் இப்போது நியூயார்க் நகரம் முழுக்க எலிகள் பரவிவிட்டன என்கிறார்கள். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் எலிகள் குறித்து வரும் அவசர கால்களும் அதிகரித்துள்ளது. இதனிடையே நியூயார்க் நகர் கவுன்சில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது நியூயார்க்கில் எலிகளைப் பிடிக்க நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எலி பிடிக்கும் நபரை பணியமர்த்திவிட்டனர். இதற்காக கேத்லீன் கொராடி என்பவரை அவர்கள் பணிக்கு அமர்த்தியுள்ளனர். நியூயார்க் கல்வித் துறையின் எலி குறைப்பு முயற்சிகளுக்குத் தலைமை தாங்கிய கேத்லீன் கொராடி என்பவரை இதற்கான தலைமை பொறுப்பிற்கு அவர்கள் நியமித்துள்ளார்.

ரூ. 1.26 கோடி சம்பளம்: நகரின் எலிகளுக்கு எதிரான போரில், எலிகளைப் பிடிக்கும் அமைப்பின் தலைவர் பதவிக்கு அவரை ஆண்டுக்கு $155,000 (ரூ. 1.28 கோடி) ஊதியத்தில் வேலைக்கு எடுத்துள்ளனர். எலிகளுடன் போராடுவது மட்டுமின்றி அதன் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நியூயார்க் மேயர் எரிக் ஏடம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தரும் அதிகமான ஊதியத்தை வைத்தே நியூயார்க் எலிகள் பிரச்சினையால் எந்தளவுக்கு அவதிப்படுகிறது, இதற்காக அவர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
70% வெற்றி: தனக்கு இவ்வளவு ஊதியம் தருகிறார்கள் என்பது உண்மை என்று உணரவே தனக்கு சில காலம் ஆனதாக கேத்லீன் கொராடி தெரிவித்துள்ளார். கேத்லீன் கொராடி கல்வி துறையில் எலிகள் ஒழிப்பில் இருந்த போது, சுமார் 70% வரை எலிகள் பிரச்சினை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது நகரின் மற்ற துறைகளுடன் இணைந்து எலிகள் பிரச்சினைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கச் செயல்பட உள்ளார்.
முதற்கட்டமாக நகரில் தூய்மையை மேம்படுத்த அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். குப்பையைச் சேகரித்து அகற்றும் நாட்களைக் குறைத்து, சில நாட்களுக்கு ஒரு முறைக் குப்பைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். இத்துடன் வரும் நாட்களில் அவர் வேறு நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications