"ஆபரேஷன் தோஸ்த்" துருக்கியில் இடிபாடுகளில் இருந்து சிறுமியை மீட்ட இந்திய குழு..குவியும் பாராட்டுகள்
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அந்த வகையில் இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
வாஷிங்டன்: துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 6-வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழு பத்திரமாக மீட்டது. சிறுமியை பத்திரமாக மீட்ட என்.டி.ஆர்.எப் படைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

சீட்டுக்கட்டுகள் போல சரிந்த வீடுகள்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டின் 10 மாகாணங்கள் குலுங்கின. அதேபோல் சிரியாவிலும் நிலநடுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. துருக்கியில் வானுயர்ந்த பல கட்டிடங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தன. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இடிபாடுகளை அகற்ற அகற்ற சடலங்களாக மீட்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் மீட்புப்படையின் 3 குழுக்கள்
எங்கு பார்த்தாலும் மரண ஓலமும் நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளாக உள்ளன. இயற்கை பேரழிவினால் அழிக்கப்பட்டு கடும் பாதிப்புக்குள்ளாகி நிலைகுலைந்து போய் இருக்கும் இந்த நாடுகளுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அந்த வகையில், இந்தியாவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையின் 3 குழுக்கள் துருக்கியில் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

6 வயது சிறுமியை மீட்ட இந்திய மீட்புக்குழு
7 வாகனங்கள் மற்றும் 4 மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிரியாவுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்பட 6 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமியை இந்திய மீட்புக்குழு பத்திரமாக மீட்டுள்ளது. காசியாண்டெப் நகரில் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழு 6 வயது சிறுமியை பத்திரமாக மீட்டதாக மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோடியின் வழிகாட்டுதலின் பேரில்
ஆபரஷேன் தோஸ்த் என்ற ஹேஷ்டேக்குடன் இந்த பதிவை உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பதிவிட்டுள்ளார். 6-வயது சிறுமியை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- "துருக்கியின் நடந்த மீட்பு பணியின் போது IND-11 -என்ற குழு பேரன் 6-வயது சிறுமியை உயிருடன் பத்திரமாக மீட்டது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் உலகின் முன்னணி மீட்புக் குழுவாக தேசிய பேரிடர் மீட்பு படையை மாற்ற நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பலரும் பாராட்டு
அதேபோல சமூக வலைத்தளங்களில் பலரும் இந்திய மீட்புக்குழுவினர் சேவையை பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இரு ஒருபக்கம் இருக்க நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இரவில் கடுமையான குளிர் வாட்டுகிறது. இதனால் வீடுகளை இழந்த மக்களின் நிலை மேலும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளது. வீதிகளில் தீயை மூட்டி குளிர் காய்ந்தவாறு மக்கள் தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்டதால் இனி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுகிறது. எனினும், முழு வீச்சில் மீட்பு பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications