எலான் மஸ்க்கிற்கு விழுந்த அடி.. உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த லாரி எலிசன்.. யார் இவர்?
வாஷிங்டன்: உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பின்னடைவை சந்தித்துள்ளார். எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி ஆரக்கிள் நிறுவனத்தனி் இணை நிறுவனர்களில் ஒருவரான லாரி எலிசன் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு லாரி எலிசனின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 100 பில்லியன் டாலர் வரை அதிகரித்தது தான் முக்கிய காரணமாகும். இதுபற்றிய விவரம் வருமாறு:
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக வலம் வருபவர் எலான் மஸ்க். எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராக உள்ளார். இதுதவிர இன்னும் பல தொழில்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக அவர் விளங்கி வருகிறார். இதற்கிடையே தான் நேற்று எலான் மஸ்க்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது உலகின் பணக்காரர்கள் பட்டியலை வரிசைப்படுத்தும் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நேற்று வெளியிடப்பட்டது.
அப்போது நியூயார்க்கில் காலை 10:10 மணி நிலவரப்படி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் அவரை விட லாரி எலிசனின் சொத்து மதிப்பு அதிகரித்து இருந்தது. அவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் டாலராக இருந்தது . இதனால் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி லாரி எலிசன் முதல் முறையாக முதலிடம் பிடித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு, அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச்-ன் பெர்னார்டு அர்னால்ட்டிடம் முதலிடத்தை இழந்தார். கடந்த ஆண்டு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய எலான் மஸ்க், 300 நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை பறிகொடுத்தார்.
எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உள்ள லாரி எலிசனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அவர் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் ஆவார். மேலும் அந்த நிறுவனத்தின் தலைமை டெக்னாலஜி அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications