அமெரிக்காவுக்கு திடீர் விசிட் அடிக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி.. உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!
வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவ தளபதி மார்ஷல் அசிம் முனீர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கும் சூழலில், இரண்டாவது முறையாக அசிம் முனீர் அமெரிக்கா செல்வதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் அசிம் மினிர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி மார்ஷல் அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவில் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் CENTCOM -நிகழ்ச்சியில் பங்கேற்க அசிம் முனீர் செல்கிறார். இதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு அசிம் முனீர் சென்று இருந்தார்.

இரண்டு மாத இடைவெளிக்குள் இருமுறை அமெரிக்காவிற்கு அசிம் முனீர் பயணம் மேற்கொள்வது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் அதிகாரம் படைத்த பதவியாக ராணுவ தளபதி இருக்க கூடிய சூழலில், அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அவர் செல்வதை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா, பாகிஸ்தான் மீது எடுத்தது. இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்யபப்ட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் அமெரிக்காவுக்கு அசிம் முனீர் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசியிருந்தார். அது மட்டும் இன்றி ஆசிம் முனிருக்கு வெள்ளை மாளிகையில் மதிய உணவு விருந்து அளித்து டிரம்ப் சிறப்பித்தார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, வர்த்தகம் பொருளாதாரம், மேம்பாடு, கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பாகிஸ்தானின் தலைவர்கள் இன்றி ராணுவ தளபதியை மட்டும் அமெரிக்க அதிபர் ஒருவர் சந்தித்தது வரலாற்றில் அதுவே முதல் முறையாக இருந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்ப் பேசுகையில், இந்தியா - பகிஸ்தான் மோதல் அதிகரித்த போது அதை தடுத்து நிறுத்துவதில் ஜெனரல் முனிரின் பங்கு பாராட்டுக்குரியது என்று டிரம்ப் கூறினார். இதற்காகத்தான், அவருக்கு நான் நன்றி சொல்வதற்காக இங்கு அழைத்தேன் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் பாராட்டால் புளகாங்கிதம் அடைந்த ஆசிம் முனிரோ, டிரம்பை நோபல் பரிசுக்கு நாமினேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்து வரும் டிரம்ப், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தானில் கச்சா எண்ணய் எடுக்க முதலீடு செய்யபடும் என்றும் பேசியிருந்தார். பாகிஸ்தான் மீது தற்போது 19 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications