பீர் குடிப்பதற்காக.. பெற்ற குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. ஆக்ஷன் எடுத்த போலீஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் ஆயிரம் டாலருக்காகவும், பீருக்காகவும் பெற்ற குழந்தையையே பெற்றோர் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த தம்பதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபகாலமாக குழந்தை திருட்டு, குழந்தை விற்பனை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பெண் குழந்தைகள் வளர்ப்பதற்கு கஷ்டம் என்று கருதி விற்பனை செய்து வந்த நிலையில், இப்போது எந்தவித பாரபட்சமின்றியும் பணத்துக்காக ஆண், பெண் குழந்தைகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் பீர் மற்றும் 84 ஆயிரம் பணத்துக்காக குழந்தையை பெற்றோர் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்த தம்பதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள அர்கான்சஸ், ரோஜர்ஸ் நகரப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மற்றும் மிஸோரி எல்லைப் பகுதியின் அருகே உள்ள ஓஸார்க்ஸில் ரோஜர் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள கேம்ப்கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டெரைன் அர்பன் (21). இவரது மனைவி ஷலினி எக்லர்ஸ் (20). இவர்கள் இருவரும் கேம்ப்கிரவுண்டில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெவர் லேக் ஹைட் அவே கேம்ப்கிரவுண்ட் பகுதியில் வசிக்கும் தம்பதி தங்களுடைய குழந்தையை ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 ஆயிரம் ரூபாய் பணத்துக்காகவும், பீருக்காகவும் விற்பனை செய்ய முயற்சிப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, டெரைன் அர்பன், ஷலினி ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற குழந்தையை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு இருவரும் கையெழுத்து போட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக அந்த தம்பதி மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் அக்டோபர் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரம் டாலருக்காகவும், பீருக்காகவும் பெற்றோரே குழந்தையை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சத்தியதாஸ் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், அவரது மூன்றாவதாக கருவுற்றதால் குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் கொடுத்துவிடுமாறு சத்தியதாஸின் நண்பரான எண்ணூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கேட்டுள்ளார். இதையடுத்து, சத்தியதாஸ் முன்பணமாக 25 ஆயிரம் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் 2 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். பின்னர், மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்ததால் பிரிய மனமில்லாமல் போலீஸிலும் அவர்களே புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications