"56 இன்ச், கடவுளின் குழந்தை எல்லாம் இப்போ காலி.." அமெரிக்காவில் இருந்தபடியே மோடியை வம்பிழுத்த ராகுல்
வாஷிங்டன்: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு 56 இன்ச் கொண்ட நபர் என்ற ஐடியா இல்லாமல் போய்விட்டதாகச் சாடியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அங்குத் திங்கள்கிழமை புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.

ராகுல் காந்தி: இதற்கிடையே அங்கு நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மீண்டும் பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு மக்களிடையே நிலவிய அச்ச உணர்வு இப்போது மறைந்துவிட்டதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, "56 இன்ச் மார்பு, கடவுளுடன் நேரடி தொடர்பு, பிரதமர் மோடி என்ற ஐடியா எல்லாம் இல்லாமல் போய்விட்டது.. இப்போது அது பழைய வரலாறாக மாறிவிட்டது" என்று விமர்சித்தார்.
விர்ஜீனியாவின் ஹெர்ண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஏதோ ஒரு மாற்றம் நடந்துவிட்டது. பாஜகவும் பிரதமரும் மக்களிடையே பயத்தைப் பரப்பினர். ஆனால் அனைத்தும் சில நொடிகளில் மறைந்துவிட்டன. இந்த அச்ச உணர்வைப் பரப்ப அவர்களுக்குப் பல ஆண்டுகள் ஆனது. ஆனால், அவை எல்லாம் ஒரே நொடியில் மறைந்துவிட்டது.
56 இன்ச் மார்பு: இதை என்னால் நேரில் பார்க்க முடிகிறது. 56 இன்ச் மார்பு கொண்ட மோடி என்ற ஐடியா கடவுளுடன் நேரடி தொடர்பு என எல்லாமே மறைந்து இப்போது வரலாறாக மாறிவிட்டது. பிரச்சாரத்தின் போது எப்போது அவர் இறைவன் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்கிறார் என்றாரோ அப்போதே அவரை காலி செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தோம். உளவியல் ரீதியாக அவரை வீழ்த்திவிட்டோம் என்பதே உண்மை.
ஆர்எஸ்எஸ் அமைப்பும் கூட திட்டமிட்டு சில தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விடத் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லி அந்த கருத்தைப் பரப்புகிறார்கள். சில மொழிகள் மற்ற மொழிகளை விட மேலானவை.. சில மதங்கள் மற்ற மதங்களை விட மேலானவை, சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட மேலானவை என்ற ஒரு தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ளாமல் இதைச் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

என்ன பிரச்சினை: ஒருவர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, அவர்களின் வரலாறு, பாரம்பரியம், மொழி முக்கியம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ் மணிப்பூரி, மராத்தி, பெங்காலி மொழிகள் தாழ்ந்தவை என்று சொல்லி வருகிறது. இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததுதான் தான் பிரச்சனை.
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பாஜக புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. இந்தியா ஒரு ஒன்றியம், நமது அரசியலமைப்பு அதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியா அல்லது பாரதம் என்று அழைக்கப்படும் நமது தேசம் மாநிலங்களின் ஒன்றியம் என்பதை அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக வரலாறு, பாரம்பரியம், நடனம், பாடல்கள் உள்ளன. அதை நாம் ஏற்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications