உலகில் 5 கோடி பேரை கொன்ற கொடூரமான கொள்ளை நோய்.. மீண்டும் அமெரிக்காவில் பரவ தொடங்கியது.! பகீர்
வாஷிங்டன்: கடந்த காலங்களில் 5 கோடி பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த கொள்ளை நோய் இப்போது மீண்டும் அமெரிக்காவில் பரவி இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.. அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் இந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.

பல போராட்டத்திற்குப் பிறகு கொரோனாவில் இருந்து உலக நாடுகள் மீண்டுள்ளது. இதற்கிடையே இந்த மோசமான கொள்ளை நோய்ப் பாதிப்பு இப்போது மீண்டும் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்துள்ளது.
கொள்ளை நோய்: இப்போது புபோனிக் பிளேக் எனப்படும் ஒருவித கொள்ளை நோய் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புபோனிக் பிளேக் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக் கூடிய ஒரு அரிய நோயாகும். இந்த கொள்ளை நோய் இப்போது அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பரவி இருப்பதை அம்மாகாண அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 14ஆம் நூற்றாண்டில் இந்த நோய் ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டது. அப்போது ஐரோப்பாவில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த கொள்ளை நோயால் உயிரிழந்தனர். அப்போது பெருந்தொற்றாக உலக நாடுகளை அலறவிட்ட இந்த கொள்ளை நோய் இப்போது யாரையும் பாதிக்காமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவில் ஒருவருக்கு இந்த புபோனிக் பிளேக் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இந்த நோய்க்கு நம்மிடம் சிகிச்சை இருக்கிறது என்ற போதிலும் இது இன்னுமே ஆபத்தான நோயாகவே இருக்கிறது.
பூனையில் இருந்து பரவல்: ஒரேகான் மாகாணத்தில் உள்ள டெஸ்சூட்ஸ் கவுண்டியில் தான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த பிரைவசி காரணமாக அந்த நோயாளியின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.. அதேநேரம் அந்த நபருக்கு இப்போது தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர், அவருக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும், பூனையில் இருந்து அவருக்கு இந்த பாதிப்பு பரவி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர்களது செல்லப்பிராணிகளுக்குச் சுகாதார அதிகாரிகள் தடுக்க மருந்துகளை வழங்கியுள்ளனர். மனிதர்களுக்குப் பரவிய பிறகு சுமார் எட்டு நாட்கள் பிறகு தான் கொள்ளை நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம் இல்லையென்றால் உயிரிழப்பு நிச்சயம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகள் என்ன: காய்ச்சல், குமட்டல், பலவீனமாக உணர்வது, குளிர் மற்றும் தசை வலி ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. இந்த நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் புபோனிக் பிளேக் செப்டிசிமிக் பிளேக் நோயை ஏற்படுத்தும். அல்லது நுரையீரலைப் பாதிக்கும் நிமோனிக் பிளேக் நோயைக் கூட ஏற்படுத்தும். இந்த இரண்டுமே ஆபத்தானது என்பதால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இது குறித்து அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நல்வாய்ப்பாக இந்த நோயை இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டோம். நோயாளிக்குத் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதனால் நாம் அச்சப்படத் தேவையில்லை.. அமெரிக்கா பாதுகாப்பாகவே இருக்கிறது. இதுவரை வேறு யாருக்கும் இந்த பிளாக் நோய்ப் பாதிப்பு கண்டறியப்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரிய பாதிப்பு: அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கே பிளேக் நோய் பாதிப்பு மிக மிக அரிதான ஒன்றாகவே இருக்கிறது. கடைசியாக அங்கே கடந்த 2015ஆம் ஆண்டில் கொள்ளை நோய் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அங்கே கொள்ளை நோய் பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த கொள்ளை நோய் 14ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகையும் அலறவிட்டது... மனித வரலாற்றில் மிகக் கொடிய பெருந்தொற்றுகளில் ஒன்றாக அறியப்படும் இந்த பிளாக் தொற்று காரணமாக அப்போது சுமார் 5 கோடி பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications