உஷார்! சார்ஜ் கம்மியா இருந்தால் அதிக கட்டணம் வருதாம்.. மொபைலை உளவு பார்க்கும் ஊபர்? குவியும் புகார்
வாஷிங்டன்: இப்போது டாக்ஸிகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்துப் பரபர வார்னிங் ஒன்று வந்துள்ளது. இதனால் நாம் தேவையில்லாமல் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
இப்போது குடும்பத்துடன் வெளியே செல்லும் போது பலரும் கார்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். பேருந்தைக் காட்டிலும் காரில் இருக்கும் கூடுதல் வசதிகள், சரியான நேரத்தில் செல்ல முடியும் உள்ளிட்ட பல காரணங்களால் காரில் செல்லவே விரும்புகின்றனர்.

கார் இல்லாதவர்கள் ஊபர், ஓலா போன்ற செயலிகளைப் பயன்படுத்தி கார்களை புக் செய்கிறார்கள். முன்பு சாலையெங்கும் ஆட்டோக்கள் வரிசையாக நின்ற நிலையில், அவை இப்போது டாக்ஸிகளாக மாறியுள்ளது.
புகார்கள்: அதிலும் இந்த செயலிகள் டாக்ஸி நிறுவனங்கள் போலவும் இருக்காது. இவை கார் உரிமையாளர்களையும் பொது மக்களையும் இணைக்கும் இடைத்தரகர் போன்ற நிறுவனங்கள் ஆகும். இதுபோன்ற Ride-hailing செயலிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே ஊபர் செயலி மீது பல நாடுகளில் பல்வேறு புகார்கள் இருக்கும் நிலையில், இப்போது நெட்டிசன்கள் புதியதொரு புகாரை முன்வைத்து உள்ளனர்.
அதாவது ஒருவரின் மொபைல் பேட்டரி குறைவாக இருந்தால், டாக்ஸி சார்ஜ்ஜை ஊபர் உயர்த்தி காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் ஆய்வை நடத்தியுள்ளது. அதில், மொபைலில் 84 சதவீத கொண்ட ஒருவருடன் ஒப்பிடும்போது, 12 சதவீத சார்ஜ் மட்டுமே கொண்ட நபருக்கு அதே பயணத்திற்கு 6 சதவீதம் கூடுதல் கட்டணத்தை ஊபர் காட்டியுள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பயன்படுத்தும் போது, கட்டணங்களில் வேறுபாடுகளை உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மொபைல் சார்ஜ்ஜை பொறுத்தும் கட்டணம் மாறுபடுவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது..
புது ஆய்வு: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் இரு ஸ்மார்ட் போன்களில் இருந்து ரைட்டை புக் செய்துள்ளனர். பிக்அப்பும், டிராப்பும் ஒரே இடத்தில் தான் இருந்துள்ளது. இருப்பினும், 84% சார்ஜ் கொண்ட போனில் கட்டணம் 16.60 யூரோ கட்டணமாக வந்த நிலையில், அதே ரைட்டிற்கு 12 சதவீதம் பேட்டரி கொண்ட மொபைலில் 17.56 யூரோ கட்டணமாக வந்துள்ளது.
அதாவது சார்ஜ் குறைவாக இருக்கும் மொபைலுக்கு 6% கூடுதலாகக் கட்டணம் வந்துள்ளது. இது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தாங்களும் இதுபோன்ற கட்டண உயர்வை எதிர் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மறுப்பு: இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ஊபர் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரைட்டிற்கான கட்டணத்திற்கும் பேட்டரி சார்ஜிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இது குறித்து ஊபர் அளித்துள்ள விளக்கத்தில், "ரைட்டிற்கான கட்டணத்தைக் கணக்கிட பேட்டரி அளவை ஒருபோதும் ஊபர் கணக்கில் கொள்ளாது. எத்தனை பேர் ரைட்டை புக் செய்ய முயல்கிறார்கள். அங்கே எத்தனை டிரைவர்கள் இருக்கிறார்கள். இப்போது ரோட்டில் டிராபிக் எப்படி இருக்கிறது ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு ரைட்டிற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கட்டணத்திற்கும் மொபைலில் இருக்கும் சார்ஜிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை: மொபைலின் பேட்டரி சார்ஜை வைத்து ஊபர் கட்டணத்தை உயர்த்தி காட்டுவதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக 2016ஆம் ஆண்டில், ஊபரின் முன்னாள் பொருளாதார ஆராய்ச்சித் தலைவர் கீத் சென் நேர்காணல் ஒன்றில், "மக்கள் தங்கள் மொபைலில் சார்ஜ் குறைவாக இருந்தால் அதிக கட்டணம் தரத் தயாராக இருப்பதை ஊபர் கண்டறிந்தது" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், இதை வைத்து கட்டணத்தை ஊபர் நிர்ணயம் செய்வதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. ஒரு ரைட்டிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய பேட்டரி சார்ஜ் போன்ற தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவது சரியானது இல்லை என்று வல்லுநர்கள் சாடியுள்ளனர். இது தனியுரிமை மீறல் என்றும் இது ஊபரின் கட்டண கொள்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications