வயாகரா.. "அந்த" பிரச்சினை மட்டுமில்லை.. அல்சைமர் பாதிப்பையும் குணமாக்குமாம்! பரபர ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: அல்சைமர் பாதிப்பு இப்போது மக்களிடையே அதிகரிக்கும் நிலையில், வயாகரா மாத்திரைகள் இந்த மறதி நோய்க்குத் தீர்வை தரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காலத்தில் அல்சைமர் நோய்ப் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாக வயதானோருக்கு அதிகம் ஏற்படும் இந்த அல்சைமர் நோய் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

நாம் யார்.. நம்மை சுற்றி இருக்கும் குடும்பத்தினரே யார் என்று தெரியாமல் போவது.. நாம் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குவது போல அமைந்துவிடுகிறது.
அல்சைமர்: இதற்கிடையே அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்துகளைக் கண்டறிய 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இப்போது தொடர்பே இல்லாத ஒரு மருந்து அல்சைமரை எதிர்த்துப் போராட வாய்ப்பு உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் பாலியல் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரை.
இந்த ஆய்வு முடிவுகள் இறுதியானது இல்லை என்றாலும், வயாகரா குறித்த இந்த ஆய்வு முடிவு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. வயாகராவை எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், வயாகராவை எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படுவது 18% வரை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் எந்தளவுக்கு அதிகமாக வயாகரா எடுத்துக் கொள்கிறாரோ அந்தளவுக்கு அதன் விளைவும் வலிமையானதாக இருந்துள்ளது.
வயாகரா: 21 முதல் 50 முறை இந்த வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு ல்சைமர் ஆபத்து 44 சதவீதம் குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக இருந்தாலும், வயாகரா மாத்திரைகளால் அல்சைமர் நோயில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க முடியும் என்பதை ஆய்வாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "அல்சைமர் குறைந்ததற்கு இந்த மருந்துகள் தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த முடிவுகளை வைத்து அடுத்த கட்ட சோதனையை நடத்த உள்ளோம். அடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அல்சைமர் ஏற்படுவதை இந்த மாத்திரைகள் எந்தளவுக்குக் குறைக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்" என்றார்.
சோதனை: இந்த ஆய்வில் பாலியல் பிரச்சினைகளை சந்தித்த 2.60 லட்சம் ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் நினைவாற்றல் இழப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வயாகரா உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக் கொண்டனர். மேலும், அவர்களைச் சராசரியாக ஐந்து ஆண்டுகள் பாலோ செய்த ஆய்வாளர்கள், அவர்களுக்கு அல்சைமர் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் வயாகரா எடுத்துக் கொண்டவர்களுக்கு அல்சைமர் பாதிப்பு குறைவாக ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 5.5 கோடி மக்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களில் பெரும்பாலோர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருந்து மூளையில் இருக்கும் புரதங்களை அகற்றுவதால் அது அல்சைமர் பாதிப்பை மெதுவாக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முதலில், வயாகரா மாத்திரைகள் ஆஞ்சினா மற்றும் உயர் ரத்த அழுத்தச் சிகிச்சைக்காகத் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை எடுத்துக் கொண்ட நபர்கள் பலருக்கும் இரவு நேரங்களில் எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இது பாலியல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் நோயாக மாறியது. இன்று வயாகரா மட்டும் கோடிகளில் புரளும் ஒரு பிஸ்னஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications