இந்த தலை.. அந்த உடலுடன் இணைய போகிறது.. கொலையும் இல்லை கலையும் இல்லை.. அலற விடும் ஏஐ ரோபோக்கள்
வாஷிங்டன்: ஒருவரது தலையை மாற்றி வேறு ஒரு நபரின் உடலுடன் பொருத்திக் கொள்ளும் புதிய வகை அறுவை சிகிச்சையை அமெரிக்க நிறுவனம் உருவாக்கி வருகிறது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை குறித்து நாம் கேள்விப் பட்டு இருப்போம்.. அவ்வளவு ஏன் கை மாற்று அறுவை சிகிச்சை குறித்துக் கூட கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால், தலை மாற்று அறுவை சிகிச்சை குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.. இம்சை அரசன் படத்தில் வருவது போல இது கலை எல்லாம் இல்லை.. உண்மையிலேயே விரைவில் நடக்கப் போகிறது.
ஆப்ரேஷன்: அதாவது அமெரிக்காவின் நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான பிரைன்பிரிட்ஜ் (BrainBridge) என்ற நிறுவனம் உலகின் முதல் தலை மாற்று முறையை உருவாக்கி வருவதாகக் கூறியுள்ளது. இது குறித்து அவர்களே தங்கள் இணையதளத்தில் விளக்கியுள்ளனர். அதாவது "நரம்பியல், மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இது ஒரு சரித்திர சாதனையாக இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரோபோக்களின் உதவியுடன் தலை மாற்று அறுவை சிகிச்சையை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதை விளக்கும் வகையிலான ஒரு வீடியோவையும் ப்ரைன் பிரிட்ஜ் நிறுவனம் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை அவர்கள் அனிமேஷன் முறையில் செய்துள்ளனர். அதில் இரண்டு அறுவை சிகிச்சை ரோபோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு உடல்களில் ஆப்ரேஷன் செய்வது போல இருக்கிறது.
விவாதம்: அதாவது அதில் அந்த ரோபோக்கள் ஒரு உடலில் இருந்து.. தலையை அகற்றி, மற்றொரு உடலில் வைக்கிறது. இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் ரோபோக்கள் எவ்வளவு நேர்த்தியாக நமது உடலில் ஆப்ரேஷன்களை மேற்கொள்ளும் என்பதையும் இந்த வீடியோ காட்டுவதாக இருக்கும்.. ஏஐ குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ பெரும் விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளன.
இது தொடர்பாக பிரைன்பிரிட்ஜ் நிறுவனம் மேலும் கூறுகையில், "தலை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.. அதிநவீன ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தலை மற்றும் முகம் மாற்று அறுவை சிகிச்சையைத் துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் சொல்வது என்ன: இது தொடர்பான வீடியோ கடந்த மே 22ஆம் தேதி இணையத்தில் பகிரப்பட்டது. அப்போது முதலே இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இது அறிவியல் அதிசயம் என்றே கூறி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் இந்த வீடியோக்கள் மிகவும் குழப்பமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
வாய்ப்பே இல்லை: இது குறித்து நெட்டிசன் ஒருவர், "இது நாள் வரை ஒருவரின் முதுகுத் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால்.. அதை அவரது தலையிலேயே இணைக்க முடிவதில்லை. அதுவே இன்னும் சாத்தியமாகாத போது.. ஒருவர் தலையை இன்னொரு நபரின் உடலில் எப்படி இணைக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற சிகிச்சையை மருத்துவத்தால் செய்யவே முடியாது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications