டிரம்ப் போட்ட ரூல்ஸ்.. "H-1B" விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்படும் இந்தியர்கள்.. டிசிஎஸ் மேஜர் நடவடிக்கை
வாஷிங்டன்: ஹெச்-1 விசாக்களை டிசிஎஸ் நிறுவனமே அதிகம் நம்பி இருந்தது. ஆனால், டிரம்ப் அரசின் கட்டுப்பாடுகள் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சிக்கலாக மாறிய நிலையில், தனது பிளானையே அந்நிறுவனம் மாற்றியுள்ளது. முன்பு பல ஆயிரம் ஹெச்-1பி விசாக்களை பயன்படுத்தி வந்த டிசிஎஸ் இந்தாண்டு வெறும் 500 ஹெச்-1பி விசாக்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்காவின் ஹெச்-1பி விசாக்களையே அதிகம் நம்பி இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்று வந்தனர். ஆனால், டிரம்ப் அரசு வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. டிரம்ப் அரசு வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.

ஹெச்-1பி விசா
அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் ஹெச்-1பி விசா சீர்திருத்தங்களை அறிவித்தது. அதன்படி புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்படுகிறது. 2026 பிப்ரவரி முதல் இது அமலுக்கு வருகிறது. இது புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் புதுப்பித்தலுக்குப் பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் ஹெச்-1பி விசாக்களையே நம்பி இருந்த இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு இது சிக்கலாக மாறியது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கிடையே டிரம்ப் கட்டுப்பாடுகள் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தனது திட்டத்தை மாற்றியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்-1பி விசாக்களை சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் டிசிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெறும் 500 ஹெச்-1பி விசா
விசா விதிகள் கடுமையாக்கப்படுவது மற்றும் வெளிநாட்டு அவுட்சோர்சிங்கிற்கு எதிரான கருத்துகளும் இதுவரை டிசிஎஸ்ஸை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டிசிஎஸ் நிறுவனத்திற்கு இது இடையூறாக இல்லை. ஆன்சைட் விசாக்களை நம்பி இருப்பதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நடப்பு நிதியாண்டில், சுமார் 500 ஹெச்-1பி விசாக்களை மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு 5,505 ஹெச்-1பி விசாக்களை அறிவித்திருந்தோம். அது புதுப்பித்தல்கள் மற்றும் திருத்தங்கள் என எல்லாம் சேர்ந்தது. புதிய விண்ணப்பங்கள் என்றால் அது 500 மட்டுமே.. கடந்த காலங்களுடன் ஒப்பீட்டு பார்த்தால், புதிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. அதுவே இப்போதும் தொடர்கிறது" என்றார்.
ஆட்குறைப்பு
டிசிஎஸ் நிறுவனத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், "நாங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தோம். அதற்கு ஆட்டோமேஷன் காரணம் இல்லை.. செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதாலோ அல்லது செயற்கை நுண்ணறிவு காரணமாகவோ இல்லை.. எங்கள் பணியாளர்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும், ஹெச்-1பி விசாக்களை நம்பி இருப்பதைக் குறைத்துவிட்டு, உள்ளூரில் அதிக ஆட்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தியர்களுக்கு சிக்கல்
அவர் இந்த இடத்தில் உள்ளூர் எனச் சொல்வது அமெரிக்காவில்.. அதாவது ஹெச்-1 விசாக்கள் மூலம் இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்கா சென்றுவந்த நிலையில், அது அப்படியே நிற்கப் போகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்காவிலேயே ஆட்களை எடுக்க டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு ஒரு இழப்பாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications