"தேர்தலில் மிக பெரிய முறைகேடு.." மீண்டும் வேலையை ஆரம்பிக்கும் டிரம்ப்? ஆதாரமின்றி பகீர் புகார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. சில மணி நேரத்தில் அமெரிக்க வாக்குப்பதிவு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திடீரென தேர்தலில் முறைகேடு நடப்பதாக டிரம்ப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பிலடெல்பியாவில் தேர்தல் முறைகேடு நடப்பதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல மாகாணங்களில் வாக்குப்பதிவு இன்னும் நடந்து வருகிறது. இதற்கிடையே டிரம்ப் இப்போது தேர்தலில் முறைகேடு நடப்பதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முறைகேடு: இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "பிலடெல்பியா நகரில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகப் பலரும் கூறுகிறார்கள். அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைகிறார்கள்" என்று பதிவிட்டு இருந்தார். அதேநேரம் என்ன மோசடி என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரம் எதையும் அவர் பகிரவில்லை.
பிலடெல்பியா என்பது பென்சில்வேனியா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். பென்சில்வேனியா மாகாணத்தில் மொத்தம் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன. இது ஸ்விக் ஸ்டேட், அதாவது யார் பக்கம் வேண்டுமானாலும் போகும் என்று கூறப்படும் நிலையில், டிரம்ப் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மாற்றி பேசும் டிரம்ப்: முன்னதாக அதிபர் தேர்தலில் டிரம்ப் வாக்களித்த பிறகு பேசும் போது, தேர்தல் நேர்மையாக நடந்து அதில் தான் தோல்வி அடைந்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறியிருந்தார். மேலும், இந்த முறை தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூட அவரே கூறியிருந்தார். இந்தச் சூழலில் திடீரென அவர் தேர்தல் மோசடி என்று பேசத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை அவரது சொந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் பிலடெல்பியா நகர ஆணையருமான சேத் புளூஸ்டீன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், "இந்த குற்றச்சாட்டில் துளி கூட உண்மை இல்லை. பிலடெல்பியாவில் வாக்குப்பதிவு நேர்மையாக எந்தவொரு குழப்பமும் இல்லாமல் நடந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
முதல்முறை இல்லை: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை குறித்து டிரம்ப் சந்தேகம் எழுப்புவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2020ல் அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வி அடைந்திருந்தார். அப்போது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வந்தார். மேலும், தனது ஆதரவாளர்களை வீதியில் இறங்கியும் போராட வலியுறுத்தினர். இந்தச் சூழலில் தான் கடந்த 2021 ஜன. 6ம் தேதி திடீரென அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் மிகப் பெரியளவில் வன்முறை வெடித்தது. இதனால் சில உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டன.
இந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால் மீண்டும் தனது தோல்வியை ஏற்காமல் பிரச்சினை செய்வாரோ என்று அஞ்சப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே பல வல்லுநர்கள் இந்த முறையும் வன்முறையை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு நிறைவடைய சில மணி நேரம் இருந்த போதே 15 மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரும் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications