டாப் பதவிக்கு டிரம்ப் டிக் அடித்த பெயர்.. சீனாவுக்கு பெரிய சிக்கல்தான்! இந்தியாவுக்கு குட் நியூஸ்
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் தனது அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் அமெரிக்க ராணுவ தேசிய காவல் படையைச் சேர்ந்த மைக்கேல் வால்ட்ஸை தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள வால்ட்ஸ், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், தனது அரசில் இடம் பெறக்கூடியவர்களைத் தேர்வு செய்து வருகிறார். அதன்படி அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்ஸை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வால்ட்ஸ்: வால்ட்ஸ் தீவிர டிரம்ப் ஆதரவாளராகவும் அறியப்படுகிறார். கடந்த ஜூலை மாதம் நடந்த குடியரசு கட்சி மாநாட்டில் பேசிய வால்ட்ஸ், "டிரம்ப் ஆட்சியில் , நாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை வீழ்த்தினோம்.. ஈரானை முறியடித்தோம், இஸ்ரேலுடன் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடன் நின்றோம்.. டிரம்ப் அதிபராக இருந்த போது நமது நாட்டில் உளவு பலூன்கள் எதுவும் பறக்கவில்லை.. டிரம்ப் ரஷ்யாவையும் தடுத்தார்... வட கொரியாவைத் தடுத்தார்" என்று பேசியிருந்தார். மேலும், அப்போதே அவர் பைடன் செயல்பாடுகளை மிகக் கடுமையாகச் சாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த வால்ட்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே சீனா குறித்துப் பல முறை கடுமையான விமர்சனங்களை வால்ட்ஸ் முன்வைத்துள்ளார். சீனா மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனாவை சமாளிக்க அதுவே ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா: மேலும், அவர் இந்தியா காக்கஸின் இணைத் தலைவராகவும் இருக்கிறார். அமெரிக்க இந்தியா உறவு குறித்துத் தொடர்ந்து பேசி வரும் வால்ட்ஸ். இந்தியாவுடன் முறையான பாதுகாப்புக் கூட்டணி கூட தேவை என்றும் அழைப்பு விடுத்து இருக்கிறார். மேலும், சீனாவால் இந்தியாவுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
சீனா-பாகிஸ்தான் இணைந்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் எச்சரித்திருந்தார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்புகள் தேவை என்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளார் . மேலும், கடந்தாண்டு சுதந்திர தினத்திற்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு இந்தியா வந்திருந்த நிலையில், அந்த குழுவுக்குத் தலைமை தாங்கியதும் வால்ட்ஸ் தான்.
யார் இவர்: வால்ட்ஸ் புளோரிடாவில் இருந்து மூன்று முறை குடியரசுக் கட்சி சார்பில் எம்பியாக தேர்வானவர்.. அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் கிரீன் பெரெட் பிரிவு வீரரும் இவர் தான்.. அமெரிக்க ராணுவத்தின் ஸ்பெஷல் ஃபோர்ஸ்களில் ஒன்று தான் இந்த கிரீன் பெரெட்ஸ். வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளைக் கொரில்லா போர் முறையில் காலி செய்வதில் இவர்கள் கில்லாடிகள். எத்தகைய சூழலிலும் செயல்படும் வகையில் இந்த கிரீன் பெரட் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். நகரம் முதல் காடு வரை எங்கு வேண்டுமானாலும் இவர்களால் பணியாற்ற முடியும்.
தீவிர டிரம்ப் ஆதரவாளரான வால்ட்ஸ் எப்போதும் டிரம்பிற்கு துணையாகவே இருந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்த டிரம்ப் முயன்ற நிலையில், அப்போதும் டிரம்பிற்கு பக்கபலமாகவே இருந்தவர். மேலும், கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் என்றும் இதனால் 2022ல் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர். மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய முடிவையும் கடுமையாக விமர்சித்தவர்.
பின்னணி: வர்ஜீனியா மிலிட்டரி இன்ஸ்டிடியூட்டில் படித்த வால்ட்ஸ் ஒரு கிரீன் பெரெட் வீரர். அவர் சுமார் 4 ஆண்டுகள் கிரீன் பெரெட்டில் வேலை செய்துள்ளார். அதன் பிறகு புளோரிடா கார்ட் பிரிவில் சேர்ந்த அவர், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் பணியாற்றியிருக்கிறார். டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் ராபர்ட் கேட்ஸ் ஆகியோர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது பென்டகனில் கொள்கை ஆலோசகராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications