அணுசக்தி ஒப்பந்த ஆஃபரை கொடுத்துட்டோம்.. ஈரான் சீக்கிரமா முடிவெடுக்கனும்! தொனியை மாற்றிய ட்ரம்ப்
வாஷிங்டன்: ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், ஈரானுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது, இதன் மீது முடிவெடுக்கவில்லை எனில் நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்
வளைகுடா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபியில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தனது நிர்வாகம் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தத்திற்கான திட்டத்தை ஒப்படைத்துள்ளதாகவும், இதன் மீது ஈரான் வேகமாக முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் நிலைமை மோசமடையும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக தங்களது ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒரு விதத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்த டிரம்ப், நீண்ட கால அமைதிக்கான நடவடிக்கை இது என்றும் விவரித்திருந்தார். மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் இரு தரப்பு உடன்படிக்கைக்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தார். மறுபுறம் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் ஆலோசகர் அலி ஷம்கானி, அமெரிக்க ஊடக நேர்காணலில், "நாங்கள் அணுசக்தித் திட்டத்தில் நீண்டகால கட்டுப்பாடுகளை ஏற்கத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
இப்படியாக இரு நாடுகளுக்கு இடையேயும் அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதனை ஈரான் ஏற்றுக்கொள்வது மட்டும்தான் தற்போது பாக்கி.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன்படி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது. அதற்கு பதிலாக அந்நாடு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, (கச்சா எண்ணெய் உட்பட) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக்கொள்ளலாம். நாங்கள் எந்த பொருளாதார தடையையும் விதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தது.
ஆனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த 2018ல் நழுவிக்கொண்டது. இது ஏமாற்று ஒப்பந்தம் என்றெல்லாம் குற்றம்சாட்டியது. மட்டுமல்லாது ஈரானிடம் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடையும் விதிக்கப்படும் என்று கூறியது. எனவே இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது.
இதற்கு ஈரான் மிகப்பெரிய பதிலடியை கொடுத்தது. அதாவது யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க தொடங்கியது. இது 13%க்குள் இருந்தால் மட்டுமே பாதுகாப்பானது. மின்சாரம் தயாரிக்கவும், இதர பல தேவைகளுக்கும் யுரேனியத்தை இந்த அளவு மட்டும் செறிவூட்டினால் போதுமானது. ஆனால், 60% அளவுக்கு யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியது.
90% வரை இந்த செறிவூட்டல் சென்றால், அணு ஆயுதத்தை உருவாக்கிவிட முடியும். 13 சதவிகிதத்திலிருந்து 90 வரை செல்வது தாமதமாகும். எனவே உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது. இதுவே 60 சதவிகிதம் எனில், உடனடியாக 90ஐ எட்டிவிடலாம். ஆக இது அணு ஆயுதத்தில்தான் போய் முடியும். இது எல்லாம் அமெரிக்கா மீது நெருக்கடியை உருவாக்கவே தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications