"200% வரி விதிப்பேன்!" இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் கருத்து.. அடுத்து என்னவாகும்?
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை அதே கருத்தைச் சொல்லியுள்ளார். மேலும், 200% வரி விதிப்பேன் எனச் சொல்லியே இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்லி டிரம்ப் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. ஒரு சில வாரங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலே நீடித்தது. அதன் பிறகே பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த மோதலை நிறுத்தியது.

டிரம்ப் சொல்வது என்ன
இருப்பினும், இந்த மோதலை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் சூழலில், இன்று மீண்டும் அதே கருத்தை டிரம்ப் கூறியிருக்கிறார். தனது வர்த்தகக் கொள்கை காரணமாகவே இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கம் போல உலகெங்கும் நடந்து வந்த 8 மோதல்களைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டார். தனது பங்களிப்பு இல்லாமல் இந்த மோதல்கள் முடிவுக்கு வந்திருக்காது என்றும் அவர் கூறினார். அடுத்து பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றங்கள் குறித்தும் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் நான் சிறந்தவன் என்பதால் இந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைப்பேன்" என்று கூறினார்.
200% வரி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் சில போர்களை வெறும் வரிகள் மூலமாகவே தீர்த்து வைத்திருக்கிறேன். உதாரணமாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரைச் சொல்லலாம். உங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.. நீங்கள் போரிட விரும்பினால், நான் இரு நாடுகளுக்கும் 100%, 150%, 200% என அதிக வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அதன் பிறகே போர் நிறுத்தம் வந்தது.. நான் வரிகளை விதிப்பதாகச் சொன்ன 24 மணி நேரத்திற்குள் அந்த விவகாரம் தீர்க்கப்பட்டது. வரிகள் இல்லையெனில், அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
இந்தியா மறுப்பு
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இதுவரை சுமார் 15+ முறை அவர் இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் எனச் சொல்லிவிட்டார். இருப்பினும், இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்தே வருகிறது. இந்தியா பாகிஸ்தான் மோதலில் வேறு எந்தவொரு நாடும் தலையிடவில்லை என்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலேயே மோதலை முடித்துக் கொண்டதாக இந்தியா கூறியுள்ளது.
பின்னணி
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இந்தியப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்க முயன்றது. இருப்பினும், இந்தியப் படைகள் அதை வெற்றிகரமாக முறியடித்தன. மறுபுறம் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களைக் குறிவைத்து இந்தியா தொடர் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமையிடமான ராவல்பிண்டியை இந்தியா தாக்கியது. அதைக் கூட பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரிக் கெஞ்சியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications