தடாலடியாக 25% புதிய வரிகளை அறிவித்த டிரம்ப்.. இரவோடு இரவாக உத்தரவு.. இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக டிரக் மீது 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நவம்பர் 1 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் வெளிநாட்டுப் போட்டியில் இருந்து அமெரிக்க டிரக் நிறுவனங்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு வரி விதித்து வருவது அனைவருக்கும் தெரியும். மீண்டும் அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக மாற்றப் போகிறேன் எனச் சொல்லி அவர் வரிகளை அறிவித்து வருகிறார். திரும்பிய பக்கமெல்லாம் அவர் வரிகளை அறிவித்து வருவதால், இது சர்வதேச அளவில் ஒரு வணிகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் வரி
இப்படித் தான் இந்தியா மீதும் டிரம்ப் 50% வரிகளை அறிவித்தார். இதுபோக ஸ்டீல், அலுமினியம் மற்றும் சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதும் ஏற்கனவே 50% வரை வரிகளை அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் டிரக்குகளுக்கும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா டிரக்குகள் எதையும் ஏற்றுமதி செய்யாத நிலையில், இந்தியாவுக்கு இது சற்றே நிம்மதி தரும் செய்தியாக உள்ளது.
புதிய அறிவிப்பு
நியாயமற்ற வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டு டிரக் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நவம்பர் 1ம் தேதி முதல் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக டிரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும்" என டிரம்ப் அறிவித்தார். இதில் கூடுதல் விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
ஐரோப்பாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிக டிரக்குகள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.. இது சர்வதேச வர்த்தகச் சங்கிலியைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், அமெரிக்காவிலும் டிரக்குகள் விலை ஏறக் காரணமாக இருக்கும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் சொல்வது என்ன
கடந்த மாதம் தான் டிரக்குகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக டிரம்ப் பேசியிருந்தார்.. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வரியை விதிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார். அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்க நிறுவனங்களை மீட்டெடுக்க வரிகளை விதிக்கப் போகிறேன். இது நமது அமெரிக்கத் தொழிலாளர்களையே பாதுகாக்கும்.வெளிநாட்டு நிறுவனங்கள் நமது சந்தையையும் தொழிலாளர்களையும் பாதிப்பதை அனுமதிக்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ், இலகுரக டிரக்குகளுக்கு அமெரிக்கா 15% மட்டுமே வரி விதிக்கிறது. டிரம்ப் இப்போது வரிகளை உயர்த்தியுள்ள நிலையில், இது ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிக்கும் பொருந்துமா.. இல்லை அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வெள்ளை மாளிகை சீக்கிரம் விளக்கமளிக்கும் எனத் தெரிகிறது.
கடும் பாதிப்பு
இந்த புதிய வரி பல வெளிநாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்காவிற்கு டிரக்குளை அனுப்பும் டாப் ஐந்து நாடுகளில் மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பின்லாந்து ஆகியவை உள்ளன. குறிப்பாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக டிரக்குகள் செல்கின்றன. 2019 முதல் இந்த வாகனங்களின் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்து. இப்போது டிரம்ப் தடாலடியாக வரிகளை அறிவித்துள்ளது இந்த நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும்.












Click it and Unblock the Notifications