"டிரம்ப் ஒரு அரக்கன்.. அவரே பாவம் பயத்தில் இருக்கிறார்.." சிகாகோ மேயர் சரமாரி குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராகவே இருந்தாலும் அவர் மீது யாராக இருந்தாலும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். இதற்கிடையே டிரம்பை ஒரு அரக்கன் என விமர்சித்துள்ள சிகாகோ மேயர் ஜான்சன், டிரம்பிற்கு அனைத்து தரப்பு மக்களும் முன்னேறுவது சுத்தமாகப் பிடிக்காது என்றும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா என்பது 50 மாகாணங்களைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் பெடரல் அரசுக்கு இணையாக, சில இடங்களில் பெடரல் அரசைக் காட்டிலும் கூட மாகாண அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரம் இருக்கிறது. மாகாணங்கள் மட்டுமின்றி மாநகராட்சி மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கும் கூட அங்குப் பல சுயாட்சி அதிகாரங்கள் இருக்கிறது.

அமெரிக்கா
மாகாண அரசுகள் அல்லது உள்ளூர் அமைப்புகள் மீது எதாவது புகார் அல்லது குற்றச்சாட்டு எழாத வரை பெடரல் அரசால் தலையிட முடியாது. அதேநேரம் புகார்கள் எழுந்தால் விசாரணை நடத்தும் அதிகாரம் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிகாகோ நகரின் நியமன நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக நீதித்துறை விசாரணை நடத்துவதாக அறிவித்தது.
அதாவது அங்குள்ள உள்ளூர் தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த சிகாகோ மேயர் ஜான்சன், "நான் இங்கு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், பூமியிலேயே மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட மக்கள் கறுப்பின மக்கள் தான். எனவே, தான் சிகாகோ நகராட்சி அதிக கறுப்பின மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது" என்றார்.
சிகாகோ
இவரது பேச்சு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. சிகாகோ நகராட்சியில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கறுப்பின மக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் மற்றவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து டிரம்ப் நிர்வாகத்தின் உதவி அட்டர்னி ஜெனரல் ஹர்மீத் தில்லான் சிகாகோ மேயருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
உயர் மட்ட பணிகளுக்கு மட்டும் கறுப்பின மக்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா.. இல்லை அனைத்து நியமனங்களுக்கும் கறுப்பின மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக என்று அட்டர்னி ஜெனரல் ஹர்மீத் தில்லான் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சிசோகா நகராட்சியின் நியமனங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
டிரம்ப் ஒரு அரக்கன்
இதற்கிடையே டிரம்பையும் அவரது நிர்வாகத்தையும் சிகாகோ மேயர் ஜான்சன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிரம்ப் பயத்தில் இருக்கிறார். மக்கள் கோபம் அவர் மீது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே அவர் பயந்துபோய் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தனது நிர்வாகத்தை அறிவுறுத்துகிறார்.
டிரம்ப் ஒரு அரக்கன்.. சிகாகோ நிர்வாகம் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. இதைப் பார்த்து அவர் அஞ்சுகிறார். இதனால் தான் பன்முகத்தன்மையை காலி செய்ய இதுபோல செய்கிறார். அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இருக்கும் கிளப் போல இருக்க வேண்டும் என்பதே டிரம்பின் விருப்பம்.. நாடு தழுவிய பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு டிரம்ப் எதிரானவர்" என்றார்.
பதிலடி
மேலும், கறுப்பின மக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில், சிகாகோ சிட்டி கவுன்சிலில் வேலை செய்யும் நபர்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு வேலை செய்யும் ஊழியர்களில் 34.3 சதவீதம் கறுப்பினத்தவர், 30.5 சதவீதம் வெள்ளையர், 23.8 சதவீதம் ஹிஸ்பானிக் மற்றும் 6.7 சதவீதம் ஆசியர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications