உக்ரைனுக்காக பேச வரவில்லை.. புடினை சந்திக்க புறப்படும் முன்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: உக்ரைனுக்காக பேச நான் வரவில்லை என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன் கூறி இருக்கிறார். ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கூறிய டிரம்ப், உடன்பாடு எட்டவில்லை என்றால் ரஷ்யா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் இந்திய நேரப்படி நாளை காலை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் சர்வதேச அளவிலான கவனம், இந்த சந்திப்பு பக்கம் திரும்பி இருக்கிறது.

இதனிடையே இந்தியா மீதான வரி விதிப்பே ரஷ்ய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்திருப்பதாக டிரம்ப் கூறி இருந்தார். எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை இருப்பதாக கூறிய டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம் அடிப்படையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
சீனா, இந்தியா என்று இரு பெரும் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதேபோல் பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் புடின் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அலாஸ்கா மாகாணம் புறப்படுவதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் பேசுகையில், உக்ரைனுக்காக நான் பேச அங்கு செல்லவில்லை. ரஷ்ய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு. தொடர் தாக்குதல்களை நடத்துவதே தங்களின் பலம் என்று புடின் நம்புகிறார்.
இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து உயிர்களை காப்பாற்றுவதற்காகவே உழைத்து வருகிறேன். உடன்பாட்டை எட்டவில்லை என்றால், ரஷ்யா பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications