நேரடியாக சந்தித்த டிரம்ப் - புதின்.. முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? இந்தியாவுக்கும் இது முக்கியம்
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை இன்று நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பு அலாஸ்கா பகுதியில் நடைபெறுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவு முக்கியமானது என்பதால் உலகமே இதைக் கவனித்து வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உக்ரைன் மோதல்
உக்ரைன் ரஷ்யா மோதல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று பார்த்துவிட்டன. ஆனாலும் மோதல் முடிவதாக இல்லை. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரஷ்ய அதிபர் புதின் சில தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த மோதல் கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவது குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்து வந்தது. ஒருவேளை நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் உக்ரைனில் நேட்டோ படைகள் களமிறக்கப்படும் சூழல் உருவானது. அதாவது ரஷ்யா எல்லையில் இருந்து சில கிமீ தொலைவில் நேட்டோ படைகள் இருக்கும் சூழல் உருவானது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இருக்கும் நேட்டோ படைகள் தனது எல்லைக்கு அருகே இருப்பதை புதின் விரும்பவில்லை. இதுவே இந்த மோதல் தொடங்கப் பிரதானக் காரணமாகும். முதலில் இந்த மோதல் தொடங்கியபோது சில வாரங்களில் இது முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப ரஷ்யாவின் கை தான் இதில் ஓங்கி இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது.
தொடரும் மோதல்
உக்ரைனும் திருப்பி அடிக்க மோதல் தொடர்ந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்தன. மேலும், உக்ரைன் மீது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மோதல் தொடர்ந்து கொண்டே போனது. இந்த மோதலால் ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே மட்டும் பாதிப்பு இல்லை. மாறாக உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் இந்த மோதலால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முடிவுக்குக் கொண்டு பல்வேறு தரப்பினரும் முயன்றனர். ஆனாலும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை.
இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், ரஷ்யா உக்ரைன் மோதலில் கவனம் செலுத்தினார். தொடர்ச்சியாக இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், அதற்குப் பெரிதாகப் பலன் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் இம்மாதத் தொடக்கத்தில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது.
நேரில் சந்திப்பு
அதாவது இன்று ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அலாஸ்காவில் நடக்கும் இந்தச் சந்திப்பில் உக்ரைன் மோதல் தொடர்பாக பிரதமனாக ஆலோசிக்கப்படுகிறது. உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தே இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள். இதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டால் இந்த மோதலே முடிவுக்கு வரும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு வருகை தந்தார். அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனி விமானத்தில் வந்து சேர்ந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்தியாவுக்கும் முக்கியம்
இந்தியாவுக்கும் இந்தச் சந்திப்பு முக்கியமானது தான். ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரியை அறிவித்திருந்தார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குதால் தான் உக்ரைன் போரை ரஷ்யா தொடர்வதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் இன்றைய தினம் சந்திப்பில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மோதல் முடிவுக்கு வரும். அதன் பிறகு இந்தியாவுக்கான வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications