இந்தியா மட்டுமில்லை! பல நாடுகளுக்கு டிரம்ப் வரி கொடுமை! எந்த நாட்டிற்கு எவ்வளவு?பாகிஸ்தானுக்கு கம்மி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த வரி நீடிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அவர் புதிய வரிகளை அறிவித்திருக்கிறார். உலகெங்கும் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் இறக்குமதிகளுக்கு 10% முதல் 41% வரை ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்துள்ளார். இந்தியாவுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது போல 25% வரியை அறிவித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்கும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவின் கீழ் 70+ நாடுகளுக்கு 10% முதல் 41% வரை ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்படுகிறது. நீண்டகாலமாக நிலவும் சமச்சீரற்ற வர்த்தக சூழலைச் சரி செய்யவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கு எவ்வளவு வரி
இந்த உத்தரவின் கீழ், இந்திய இறக்குமதிகள் 25% வரியைச் சந்திக்க நேரிடும். அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவுக்கு முன்பு 25% இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் போதைப்பொருள் நெருக்கடி மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக இந்த வரி விதிப்பதாக டிரம்ப் கூறுகிறார்.

எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி
- சிரியா- 41% வரி
- லாவோஸ் மற்றும் மியான்மர்- 40% வரி
- சுவிட்சர்லாந்து- 39% வரி
- ஈராக் மற்றும் செர்பியா- 35% வரி
- அல்ஜீரியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, லிபியா, தென்னாப்பிரிக்கா- 30% வரி
- இந்தியா, புரூணை, கஜகஸ்தான், மால்டோவா, துனிசியா- 25% வரி
- பங்களாதேஷ், இலங்கை, தைவான், வியட்நாம் - 20% வரி
- பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து- 19% வரி
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் 15%க்கும் அதிகமான இறக்குமதி வரி கொண்ட பொருட்கள் இந்த புதிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. 15%க்கு கீழ் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் வரி 15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எப்போது அமலுக்கு வரும்
அதேநேரம் இந்த புதிய வரிகள் இன்று ஆகஸ்ட் 1ம் தேதியே அமலுக்கு வராதாம். புதிய வரிகள், ஏழு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி தான் நடைமுறைக்கு வரும். மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்டு, அக்டோபர் 5ஆம் தேதிக்குள் அமெரிக்காவை அடையும் சரக்குகளுக்கும் இந்தப் புதிய வரிகள் பொருந்தாது. இருப்பினும், கனடாவுக்கு இதில் விதிவிலக்கு தரப்பட்டு, இன்று ஆகஸ்ட் 1 முதலே புதிய வரி அமலுக்கு வந்துள்ளது.

இப்போது வரை ஓரிரு நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தாலும் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமெரிக்கக் கருவூலச் செயலர் ஸ்காட் பெஸ்ஸென் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் ஒரு நிரந்தர வர்த்தக உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் ஸ்காட் பெஸ்ஸென் தெரிவித்தார்.
இந்தியா அமெரிக்கா உறவு
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகப் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படாது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் இறுதியாகப் பல வாரங்கள் கூட ஆகலாம் என்கிறார்கள். இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது இரு நாட்டு வர்த்தக உறவைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications