சீனாவை தவிர.. மற்ற நாடுகளுக்கான வரியை 90 நாட்களுக்கு நிறுத்திய டிரம்ப்! இந்தியாவின் நிலை என்ன?
வாஷிங்டன்: மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால் இது சீனாவுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளார்.
சீனாவுக்கான வரியை டிரம்ப் நிறுத்தி வைக்க மறுப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் மறைமுகமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க பொருட்களுக்கு உலக நாடுகள் குறிப்பிட்ட அளவுக்கு வரியை விதித்திருக்கின்றன. ஏனெனில் டாலரை அமெரிக்காதான் கட்டுப்படுத்துகிறது. எனவே அந்நாட்டின் மீது எவ்வளவுதான் வரியை விதித்தாலும் அது பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவும் அமெரிக்க பொருட்கள் மீது கடுமையான வரியை விதித்திருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியா 60-100% வரை வரியை விதித்திருக்கிறது. மொபைல் போன்களுக்கு 20%, பிளாஸ்டிக் பொருட்களுக்கு 30% என நாம் வரியை விதித்திருக்கிறோம்.
இதையெல்லாம் பார்த்த டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 26% அளவுக்கு வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் வரி விஷயத்தில் அமெரிக்காவை திட்டி தீர்த்து வருகின்றன. குறிப்பாக கனடா, ஜப்பான், மெக்சிகோ பொன்ற நட்பு நாடுகளே அமெரிக்கா மீது அதிருப்தியில் இருக்கின்றன.
வேறு எந்த நாடுகளை விடவும் சீனா மீதுதான் அமெரிக்கா அதிக வரியை அறிவித்தது. தொடக்கத்தில் 104% வரியை டிரம்ப் போட்டிருந்தார். சீனா சும்மா இருக்குமா? அதுவும் அமெரிக்க பொருட்களுக்கு 84% அளவுக்கு வரியை விதித்தது. இதனையடுத்து கோபப்பட்ட டிரம்ப், 125% அளவுக்கு வரியை போடுவதாக அறிவித்தார். இதுவரை இவ்வளவு வரி எந்த நாடுகளுக்கும் விதிக்கப்பட்டதில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக நாடுகள் குரல் எழுப்பும் என்று பார்த்தால், தங்கள் நாட்டின் மீதான வரியை குறைக்க மட்டுமே அந்த நாடுகள் பேச தொடங்கின.
தொடர் வற்புறுத்தலையடுத்து அனைத்து நாடுகள் மீதான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். எப்படி இருப்பினும் 10% வரி அனைத்து நாடுகள் மீதும் தொடரும். ஆனால் சீனாவுக்கு மட்டும் இந்த வரி நிறுத்தி வைப்பு பொருந்தாது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. மொத்தம் 75 நாடுகளுக்கு வரி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவுக்கு வரியை நிறுத்தி வைக்காதது இந்தியா மீது மறைமுகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சீனாவின் தயாரிப்புகள் அமெரிக்க சந்தைக்கு பதிலாக இந்திய சந்தையை ஆக்கிரமிக்கலாம். இந்தியாவில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு இது ஆபத்தை ஏற்படுத்து கூடும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications