சீனாவுடன் டிரம்ப் போட்ட பேக்கரி டீல்! கனிமவளங்கள் ஏற்றுமதிக்கு ஒகே சொன்ன ஜி ஜின்பிங்!
வாஷிங்டன்: சீனா - அமெரிக்கா மோதலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்று போட்டுள்ளன. இதன் மூலம், இருநாடுகளுக்குமான உறவு தற்போது சிறப்பாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கும் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அமெரிக்காவுக்கு அனைத்து துறைகளிலும் கடும் சவால் அளிக்கும் நாடாக மாறிவரும் சீனா, பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது.

எங்கே போய் முடியுமோ?
இதனால், அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் பனிப்போர் கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தை தொட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில்தான், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பை அமல்படுத்தினார். சீனா இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்ததால், வேறு எந்த நாட்டின் மீது இல்லாத அளவுக்கு சீனா மீது அமெரிக்கா கிட்டத்தட்ட 240 சதவீதம் அளவுக்கு வரி விதித்தது.
இதனால், சர்வதேச அளவில் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில்தான், சீனா - அமெரிக்கா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக முக்கியமான கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்தது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
மிக முக்கிய திருப்பம்
சீனாவுக்கு எதிரான பிடியை இறுக்கும் விதமாக சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயில டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே சென்றதால், இது எங்கே போய் முடியுமோ.. என்று உலக நாடுகள் கவனித்துக்கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் மிக முக்கியமான திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சீனா அமெரிக்காவுக்கு காந்தங்களையும், அரிய வகை கனிமங்களையும் வழங்கும். சீன மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
உறவு சிறப்பாக உள்ளது
கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டு இருந்த நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு சிறப்பாக உள்ளதாக டிரம்ப் தற்போது கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு 55 சதவீத வரி கிடைகும். சீனாவுக்கு 10 சதவீத வரி. இருநாடுகளுக்கும் இடையேயான உறவு சிறப்பாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
எனினும், இந்த ஒப்பந்தமானது தனக்கும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும் இடையே ஏற்படும் இறுதி ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டது என்றும் டிரம்ப் பதிவிட்டு உள்ளார். வெள்ளை மாளிகை அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், "சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, அடிப்படை 10 சதவீத வரியுடன் 55 சதவீத வரி விதிக்கும். அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா 10 சதவீதம் வரியை விதிக்கும்" என்றனர். சீனா- அமெரிக்கா இடையே ஏற்பட்டு இருக்க கூடிய இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications