குட்டையை குழப்பிய டிரம்ப்! ஹார்வர்ட் பல்கலை பிரச்சனையால்.. நிம்மதியை இழந்த இந்திய மாணவர்கள்!
வாஷிங்டன்: உலக புகழ்பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட் மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் 7,000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். மொத்த எண்ணிக்கையில் 10%, அதாவது 700க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். டிரம்பின் கெடுபிடிகளால் தற்போது அவர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர்.
கல்வி நிலையங்களில்தான் அரசியல் புரிதல் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அரசியல் படுத்தப்படாத மாணவர்கள், மனிதகுல வளர்ச்சிக்கு பங்களிப்பில்லாதவர்களாக மாறுகிறார்கள். அந்த வகையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களை தரமாக அரசியல் படுத்திக்கொள்கிறார்கள். உலகில் எங்கோ நடக்கும் சிறு அநீதிக்கு கூட, ஹார்வர்டிலிருந்துதான் முதல் எதிர்ப்பு குரல் எழும். இஸ்ரேல்-பாலஸ்தீன போரிலும் ஹார்வர்ட் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

டிரம்பின் கோபத்திற்கான காரணம்
இதுதான் இப்போதைய பிரச்சனைக்கு காரணம். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குகிறது. மட்டுமல்லாது இந்த போருக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கியிருக்கிறது. ஆனால், அதன் சொந்த நாட்டு மாணவர்கள், அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக போராடுவது சர்வதேச அளவில் டிரம்புக்கு கவுரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. எனவே பல்கலையில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
டிரம்பின் உத்தரவும் பல்கலையின் போராட்டமும்
இது மட்டும் நடந்திருந்தால், இந்திய மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு அமெரிக்காவின் வேறு கல்வி நிலையங்களில் இடமும் கிடைத்திருக்காது. ஆனால் நல்வாய்ப்பாக, இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் முறையிட, நீதிமன்றமும் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தது. இருப்பினும் சும்மா இல்லாத டிரம்ப், புதியதாக இனி எந்த வெளிநாட்டு மாணவரையும் சேர்க்கக்கூடாது என்று இன்னொரு உத்தரவை போட்டார். அதற்கும் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
இந்திய மாணவர்கள் அச்சம்
டிரம்பின் இப்படியான நடவடிக்கைகளால் இந்திய மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ந்து கல்வி பயில முடியுமா? என்று பதற்றமடைந்திருக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் கல்வி பயில வருபவர்களுக்கு F1 விசா வழங்கப்படுகிறது. ஹார்வர்டில் கல்வியை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் ஓராண்டு வரை அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் F1 விசா இதை அனுமதிக்கிறது. அதுவே, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) உள்ளிட்ட துறைகளில் வேலை கிடைக்கிறது எனில் 3 ஆண்டுகள் வரை F1 விசா செல்லும்.
விசா கட்டுப்பாடுகள்
இதிலும் சிக்கல் இருக்கிறது. இந்திய மாணவர்களுக்கு மட்டும்தான் கல்விக்காக 5 ஆண்டு விசா வழங்கப்படுகிறது. ஆனால் வேறு சில நாட்டு மாணவர்களுக்கு ஓராண்டு விசாதான் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவை அவர்கள் புதுப்பிக்க வேண்டும். இப்படி இருக்கையில், விசா நடைமுறைகளை டிரம்ப் கறார் ஆக்கிவிட்டால், விசாவை பெற முடியாமல் போய்விடும். கல்வியும் பாதியில் நின்றுவிடும்.
அமெரிக்காவை விரும்பாத மாணவர்கள்
அதேபோல விடுமுறையில் இந்தியாவுக்கு திரும்பியுள்ள மாணவர்கள், மீண்டும் அமெரிக்காவுக்கு போகலாமா? என்று யோசித்து வருகின்றனர். காரணம், டிரம்ப், எப்போது என்ன முடிவெடுப்பார் என்று தெரியாது. இரண்டு வழிகளில் முயன்று பார்த்தவர் மூன்றாவது ஒரு வழியை கண்டுபிடித்து வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை போட்டுவிட்டால், அங்கு கல்வி கற்க முடியாமல் போய்விடும். இப்படி நிரந்தரமில்லாத சூழலால் இந்திய மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவின் தீர்வும், இந்தியாவின் மௌனமும்
சீனா இந்த பிரச்சனைக்களுக்கு அற்புதமான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, தனது மாணவர்களை மீண்டும் அழைத்துக்கொண்டிருக்கிறது. சீனாவில் உள்ள பிரபல கல்வி நிலையங்களிலேயே கல்வியை சொல்லிக்கொடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இந்தியா இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை இந்திய மாணவர்கள் பாதியில் நாடு திரும்பினால் அவர்களுக்கு இங்குள்ள தலைசிறந்த கல்வி நிலையங்களில் கல்வி கிடைக்குமா?
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே இந்திய மாணவர்களின் அச்சம் குறையும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications