"உலகையே உலுக்கி போடும் அறிவிப்பு.." மெகா சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்.. ஆஹா இதை நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது எதை அறிவிப்பார் என்று யாருக்குமே தெரியாது. இதற்கிடையே அவர் உலகையே உலுக்கிப் போடும் ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வரப்போவதாகச் சொல்லி புதிர் போட்டு இருக்கிறார். இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வரும் என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், நெட்டிசன்களிடையே அவரது பேச்சு டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப், மீண்டும் அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லிப் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இருப்பினும், அவரது அறிவிப்புகளை யாராலும் யூகிக்க முடியவில்லை. எப்போது அவர் என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்பதில் பலருக்கும் கேள்வி இருக்கவே செய்கிறது.

புதிர் போட்ட டிரம்ப்
இதற்கிடையே அதிபர் டிரம்ப் இப்போது திடீரென ஒரு மேஜர் புதிரைப் போட்டார். அதாவது அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் ஒரு அறிவிப்பை வெளிப்பாட்டை வெளியிடப் போவதாகக் கூறினார். கனடா தேர்தலில் வென்று அந்நாட்டுப் பிரதமராகத் தேர்வான மார்க் கார்னியுடனான சந்திப்பின் போது டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு முக்கியமான விஷயத்தை பற்றியது.. ஆனால் இது இந்த நாட்டிற்கும் இந்த நாட்டு மக்களுக்கும் முக்கியமானது. உலகையே உலுக்கும் வகையிலான அறிவிப்பாக இருக்கும்.. பாசிட்டிவ் வளர்ச்சியாக இருக்கப் போகிறது" என்று அவர் கூறியிருந்தார். டிரம்ப் இதுபோல புதிர் போட்டது பல விதமான கருத்துகள் பரவக் காரணமாக இருந்தது.
அவரது டீமிற்கே தெரியாது
இருப்பினும், டிரம்ப் கூடுதலாக எந்தவொரு கருத்தையும் அப்போது கூறவில்லை. அமெரிக்க ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டனர். என்னவாக இருக்கும் எனக் கேட்டுள்ளனர். ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் அவர்களுக்கே டிரம்ப் என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லையாம். இதனால் அவர்களே ஒருவிதக் குழப்பத்தில் தான் உள்ளனராம்.
நெட்டிசன்கள்
நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு ஏகப்பட்ட கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.. வர்த்தக ஒப்பந்தம், டிரம்ப்பின் மத்தியக் கிழக்கு பயணம் என எதாவது ஒன்றைப் பற்றி இருக்கும் என்கிறார்கள். இன்னும் சிலர் கிரீன்லாந்தை வாங்க முடிவு செய்துள்ளாரே.. அதைப் பொறுத்தும் கூட இருக்கலாம் என்றனர்.. இன்னும் சிலர் ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயலும் நிலையில், அதைத் தடுக்க டிரம்ப் முயற்சிக்குப் பலன் கிடைத்திருக்கும். இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டிருக்கும் என்றனர். இதுபோல பலரும் பலவிதக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையே டிரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவரே இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் முதலில் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஓவல் அலுவலகத்தில், ஒரு பெரிய மிகவும் மதிக்கப்படும் நாட்டின் பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒரு மிக முக்கியமான செய்தியை வெளியிடப் போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
என்னவாக இருக்கும்?
அதேநேரம் எந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா எனப் பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் எந்த நாடு தொடர்பாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், வர்த்தக ஒப்பந்தம் இறுதியாவது எல்லாம் ஈஸியான காரியம் இல்லை. அதற்குப் பல மாதங்கள் முதல் ஆண்டுக்கணக்கில் கூட ஆகலாம்.
எனவே, இந்த குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக எல்லாம் வாய்ப்பில்லை. மாறாக இரு தரப்பும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளோம் என்பது போல ஒரு அறிவிப்பு மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது. சீனா உடன் வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் உடனான பேச்சுவார்த்தை குறித்தும் கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.. ஆனால், டிரம்ப் என்ன செய்வார் என்பது அவரது நெருங்கிய வட்டாரத்திற்கே தெரியாது என்பதால் விடைக்கு நாம் காத்திருக்கவே வேண்டும்.!












Click it and Unblock the Notifications