டிரம்ப் போட்ட 25% வரி.. டாடா உட்பட, இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பா? முழு விவரம் இதோ!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாகன இறக்குமதிக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளது (25% tariff on automobile) உலகளவில் வாகனத் தொழிலை உலுக்கியுள்ளது. இந்த புதிய வரி இந்திய வாகனத் தொழிலுக்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் இந்த நடவடிக்கையை அமெரிக்காவில் வாகன உற்பத்தியை அதிகரிக்கவும், நீண்ட விநியோகச் சங்கிலியை குறைக்கவும் எடுத்துள்ளார். இந்த வரி வாகனங்கள் மற்றும் முக்கியமான உதிரி பாகங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.

இந்தியாவின் நேரடி வாகன ஏற்றுமதி அமெரிக்காவிற்கு குறைவாக இருந்தாலும், வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி கணிசமாக உள்ளது. இந்த புதிய வரி காரணமாக அமெரிக்காவில் வாகன உற்பத்தி செலவு அதிகரிக்கலாம். இதனால் இந்திய உதிரி பாகங்களுக்கான தேவையும் குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் (டாடா மோட்டார்ஸ்), ராயல் என்ஃபீல்டு (ஐச்சர் மோட்டார்ஸ்) போன்ற நிறுவனங்கள் மற்றும் சாம்வர்தனா மதர்சன், சோனா காம்ஸ்டார் போன்ற உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.
இந்த வரி விதிப்பு கனடா, ஜப்பான் போன்ற நாடுகளையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று இந்திய அரசு நம்புகிறது. இந்த புதிய வரி இந்திய வாகனத் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பா?
நேரடி தாக்கம் குறைவு: இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் முழுமையான வாகனங்களின் எண்ணிக்கை மெக்சிகோ, கனடா மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடும்போது குறைவு.
வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்குப் பெரிய பாதிப்பு: இந்திய வாகன உதிரிபாகங்கள் தொழில் உலகளாவிய விநியோக செயினை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், அமெரிக்க கார் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான சப்ளையராகவும் இந்தியா விளங்குகிறது. இந்த புதிய வரி காரணமாக அமெரிக்க கார் உற்பத்தியாளர்களுக்கு உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்து, இந்திய வாகன உதிரிபாகங்களுக்கான தேவை குறையலாம்.
2024 நிதியாண்டில் இந்தியா 21.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது தாக்கம்:
டாடா மோட்டார்ஸ் நேரடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டாலும், அதன் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) அமெரிக்க சந்தையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. JLR தனது வாகனங்களை முக்கியமாக இங்கிலாந்து மற்றும் பிற சர்வதேச ஆலைகளில் உற்பத்தி செய்கிறது. இனி இந்த வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தயாரிக்கும் ஐச்சர் மோட்டார்ஸ் நிறுவனமும் பாதிக்கப்படலாம். ஏனெனில் அமெரிக்கா அதன் 650cc மாடல்களுக்கு முக்கியமான சந்தையாக உள்ளது.
டெஸ்லா மற்றும் ஃபோர்டு போன்ற நிறுவனங்களுக்கு முன்னணி வாகன உதிரிபாக சப்ளையராக இருக்கும் சாம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தி வசதிகள் இருப்பதால், வரி தொடர்பான இடையூறுகளில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும்.
டிஃபரென்ஷியல் கியர்கள் மற்றும் ஸ்டார்டர் மோட்டார்களை சப்ளை செய்யும் சோனா பிஎல்டபிள்யூ பிரசிஷன் ஃபோர்ஜிங்ஸ் (சோனா காம்ஸ்டார்) தனது வருவாயில் 66% அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பெறுகிறது. வணிக நிச்சயமற்ற தன்மையால், நிறுவனம் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது.
பாரத் ஃபோர்ஜ், சன்சேரா இன்ஜினியரிங் லிமிடெட், சுப்ராஜித் இன்ஜினியரிங் மற்றும் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் போன்ற முக்கிய உதிரிபாக தயாரிப்பாளர்களும் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்க நேரிடும்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தாக்கம்
அமெரிக்க வாகன விநியோகச் சங்கிலியை பெரிதும் நம்பியுள்ள கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் வணிக மற்றும் உற்பத்தி இடையூறுகளை சந்திக்க நேரிடும். இந்தியாவின் நேரடி தாக்கம் குறைவாக இருந்தாலும், விநியோகச் சங்கிலிகள் மற்றும் சந்தை மாற்றங்கள் மூலம் மறைமுகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உலக நாடுகளின் எதிர்வினை
கனடா: இந்த வரியை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜப்பான்: வரிக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
ஐக்கிய இராச்சியம்: இந்த வரி இரு நாடுகளின் வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்: அமெரிக்காவின் பாதுகாப்புவாத கொள்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறது.
அடுத்து என்ன?
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி வர்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு மார்ச் 25 முதல் 29 வரை இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவின் உள்நாட்டு தேவையை இந்தியா புரிந்துகொள்கிறது என்றும், விரைவில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மேம்படும் என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications