இந்தியர்கள் எப்போது வெளியேற வேண்டும்? H-1B விசாவின் நோக்கம் இதுதான்! உடைத்து பேசிய அமெரிக்கா
வாஷிங்டன்: H-1B விசா பற்றிய சலசலப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த விசா மூலம் அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களின் வேலை என்ன? அவர்கள் எப்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? என்பது குறித்து அமெரிக்க அரசு அதிகாரி ஸ்காட் பெசென்ட் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் மக்கள் அந்நாட்டின் பூர்வ குடிகள் கிடையாது. திறமையானவர்கள் வந்து, அமெரிக்காவுக்காக உழைத்து பின்னர் அந்த நாட்டின் குடிமகனாக, அரசியல்வாதியாக, அதிபராக மாறுகிறார்கள். இத்தனை காலமும் இப்படிதான் அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால் டிரம்ப் வந்த பின்னர், குடியேறிகள் என்கிற வார்த்தை பேமஸ் ஆனது.

திறமையும் அமெரிக்காவும்
H-1B விசா மூலம் திறமையானவர்கள் அமெரிக்காவுக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தார் டிரம்ப். சரி அதுக்கு என்ன செய்யலாம்? உங்க ஊரில்தான் திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறதே! என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்துதான் H-1B விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். ரூ.84 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் H-1B விசா கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. மறுபுறம் H-1B விசா நடைமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டிரம்ப் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
H-1B விசாவுக்கு புதிய வரையறை
இப்படி இருக்கையில், அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், H-1B விசா வைத்திருப்போரின் பணி என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறார். அதாவது, "திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்கள், H-1B விசா மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பின்னர் தங்கள் தாய் நாடுகளுக்கே அனுப்பப்படுவார்கள். அதிபரின் நோக்கம் இதுதான்.
வேலைகள் எங்கு உருவாகிறதோ, அங்கிருந்து திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வந்து, மூன்று, ஐந்து, ஏழு ஆண்டுகளுக்கு அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்போம். அதன் பிறகு அவர்களை, அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம். பயிற்சி பெற்ற அமெரிக்கத் தொழிலாளர்கள் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். சில துறைகளில் திறமையானவர்கள் அமெரிக்காவில் இல்லாததால், வெளியில் இருந்துதான் நாம் திறமையானவர்களைக் கொண்டு வர வேண்டும்.
20-30 ஆண்டுகளாக அமெரிக்காவின் நிலைமை
கடந்த 20-30 ஆண்டுகளாக செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற அதிநவீன துல்லியமான உற்பத்தி பணிகளை நாம் அவுட்சோர்ஸ் செய்திருக்கிறோம். வெளியில் கொடுத்துதான் இந்த வேலைகளை வாங்கியிருக்கிறோம். இப்படி இருக்கையில் நீங்கள் ஒரே இரவில் கப்பல் கட்டக் கற்றுக்கொள்வீர்கள் என்று சொல்ல முடியாது. செமிகண்டக்டர் துறையை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டுவர விரும்புகிறோம். டிரம்ப் H-1B விசா திட்டத்தை ஆதரித்திருக்கிறார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் திறமையையும் கொண்டு வர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
சுரண்டப்படும் இந்தியர்கள்
முன்னதாக H-1B விசா குறித்து இந்திய மாணவி ஒருவர், துணை அதிபர் ஜே.டி.வேன்ஸிடம் இந்த விசா குறித்து சரமாரியாக கேள்வியை எழுப்பியிருந்தார். வேன்ஸும் H-1B விசாவுக்கு எதிரானவர். இந்நிலையில் பல்கலைக்கழகம் ஒன்றில் அவர் உரையாற்றியபோது, "அமெரிக்காவில் அதிகமாக வெளிநாட்டினர் குடியேறுகிறார்கள் என்று பேசும் நீங்கள், எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதை எப்போது முடிவு செய்தீர்கள்? எங்களின் இளமையையும், உழைப்பையும் அமெரிக்காவில் செலவழித்த பின்னரா?" என்று இந்திய மாணவி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications