"ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதி.." பைடன் மீது பகீர் குற்றச்சாட்டு.. கொதித்தெழுந்த ரஷ்யா! பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் இதற்கு முன்பு பைடன் அதிபராக இருந்த சூழலில், அவரது அரசு ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயன்றதாகவும் இதற்காகச் சதி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த பழமைவாதியும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் முன்னாள் தொகுப்பாளருமான டக்கர் கார்ல்சன் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகக் கடந்த 20ம் தேதி அதிபர் டிரம்ப் பதவியேற்றார். அதன் பிறகு அவர் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரம் இதற்கு முன்பு இருந்த பைடன் நிர்வாகத்தையும் அவர் தொடர்ந்து சாடி வந்தார்.

பரபர குற்றச்சாட்டு:
இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த பழமைவாதியும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் முன்னாள் தொகுப்பாளருமான டக்கர் கார்ல்சன், இதற்கு முன்பு அதிபராக இருந்த பைடன் மீது சில பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினை பைடன் நிர்வாகம் கொல்ல முயன்றதாகவும் பைடன் நிர்வாகம் எதற்காக இந்த முடிவை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்றும் சாடியுள்ளார். "தி டக்கர் கார்ல்சன் ஷோ" என்ற அவரது பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
புதினை கொல்ல சதி:
பைடன் ஆட்சியில் வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்த டோனி பிளிங்கன் தான் சர்வதேச அளவில் போரை உருவாக்க முயன்றதாகவும் இதன் மூலம் புதினை கொல்ல முயற்சிகள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "பைடன் நிர்வாகம் புதினை கொல்ல பார்த்தது. அது தான் உண்மை. உண்மையில் இந்த முடிவு பைத்தியக்காரத்தனமானது. முட்டாள்தனமானது. அவர்கள் எதற்காக புதினை கொல்ல வேண்டும். இதுபோல ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்" என்றார்.
டக்கர் கார்ல்சனின் இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், டக்கர் கார்ல்சனின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் தரவில்லை. அவர் யூகத்தின் அடிப்படையிலேயே பேசியதாகவே தெரிகிறது. இதற்கு முன்பு ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தில் தொகுப்பாளராக வேலை செய்து வந்த டக்கர் கார்ல்சன், 2020 அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உண்மைக்கு முரணான தகவல்களைப் பகிர்ந்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா விளக்கம்:
டக்கர் கார்ல்சனின் இந்த குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பைடன் தரப்பில் இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. அதேநேரம் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். புதினின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஷ்ய அதிபர் மட்டுமின்றி ரஷ்ய மக்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதிபருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
முதல்முறை இல்லை:
டக்கர் கார்ல்சன் இதற்கு முன்னதாகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். போரில் உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் நிதியுதவி செய்தி நிலையில், அதை டக்கர் கார்ல்சன் கடுமையாக விமர்சித்து இருந்தார். உக்ரைனுக்கு உதவி செய்வது தேவையே இல்லாத ஒன்று என்பது போல அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications