அடுத்த அதிரடி.. ட்விட்டரில் வந்த முக்கிய அப்டேட்.. எடிட் ஆப்ஷனில் வந்த முக்கிய மாற்றம்.. என்ன இது?
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியவுடன் தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ட்விட்டரில் அறிமுகம் செய்ப்பட்டுள்ள எடிட் ஆப்ஷனில் பயனர்களின் வசதிக்காக கூடுதல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இவர் விண்வெளி துறையில் சாதிக்கும் ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார். இதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் எலான் மஸ்க் பின்வாங்கினார். அதன்பிறகு நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்.
தற்போது ட்விட்டர் சிஇஓவாக லிண்டா யாக்கரினோ செயல்பட்டு வருகிறார். முன்னதாக ட்விட்டரின் சிஇஓ என்ற தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் எலான் மஸ்க் செயல்பட்டார். இந்த வேளையில் பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டர் ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தினார்.
இதையடுத்து சமீபத்தில் ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே இது செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி ட்விட்டர் பதிவை எடிட் செய்து கொள்ளலாம். 30 நிமிடம் வரை எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது எடிட் செய்யும் வசதிக்கான கால அளவு 30 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் அதாவது ஒரு மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ட்விட்டரில் பதிவுகளை முதல் ஒரு மணிநேரத்தில் எடிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 5 முறை வரை ட்விட்களை எடிட் செய்யலாம். மேலும் அந்த பதிவில் எடிட் செய்யப்பட்ட ட்விட் என்பது தெரிவிக்கப்படும்.

இதுதவிர ப்ளூ டிக் ‛சப்ஸ்கிரைபர்களுக்கான' பிற சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி விளம்பர இம்சைகள் இல்லாமல் ட்விட்டர் தளத்தை அவர்கள் தொடர்ந்து பெற முடியும். அதோடு ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும். இதுமட்டுமின்றி 10,000 கேரக்டர்களில் ஒரு ட்விட்டை செய்யவும் முடியும்.
இந்த அம்சங்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டாம். ப்ளூடிக் பயன்பாட்டுக்கான கட்டணமே போதும். ட்விட்டரை பொறுத்தமட்டில் ப்ளூடிக் பயனர்களின் வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என இதன் மாதாந்திர சந்தா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications