பலத்த வன்முறைகளுக்கு மத்தியில்.. ஜோ பிடனின் வெற்றியை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கான வெற்றிச் சான்றிதழும் அளிக்கப்பட்டது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜோ பிடன் 306 இடங்களிலும் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர். எனினும் ஜோபிடன் வெற்றியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
அவர் தேர்தலில் முறைகேடு நிகழ்த்தியதாக ஆதாரமற்ற தகவல்களுடன் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்து அவற்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஜோ பிடன் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக தேர்தல் சபை உறுப்பினர்கள் (Electoral College) தங்கள் வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நிகழ்ந்தது.

ஆதரவாளர்கள்
அந்த வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்து வந்தன. இந்த வாக்குகள் எண்ணப்பட்டால் ஜோ பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதை தடுத்து நிறுத்த டிரம்ப் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

துப்பாக்கிச் சூடு
அப்போது அங்கு நடந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு பெண் பலியானார். கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 3 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 13 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போராட்டம்
6 மணி நேரமாக நீடித்த இந்த போராட்டத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் மீண்டும் கூடியது. பிடனை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கியது. இரு அவைகளின் உறுப்பினர்களும் விவாதம் நடத்தினர். இந்த நிலையில் ஆங்கில அகரவரிசைபடி ஒவ்வொரு மாகாணத்தின் வாக்குகளும் எண்ணப்பட்டன.

செனேட்டர்
இந்த வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் செனேட்டர் ஏமி க்லோபூச்சர் முடிவுகளை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் வாக்குகளின் அடிப்படையில் ஜோ பிடனும் கமலா ஹாரீஸும் அதிபராகவும் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார் என்றார். உடனே கைத்தட்டல்கள் விண்ணை முட்டின.

போதுமானது
சில மாநிலங்களில் உறுதியாகாமல் இருந்த ஜோ பிடனின் வெற்றி உறுதி செய்தது. பின்னர் ஜோ பிடனுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதையடுத்து துணை அதிபர் பென்ஸ் கூறுகையில் பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன. அவர்களது தேர்வுக்கு இதுவே போதுமானது என்றார்.

கமலா
இதையடுத்து ஜோபிடனும் கமலாவும் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அதிபராகவும் துணை அதிபராகவும் பொறுப்பேற்கிறார்கள். இந்த நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இத்துடன் திங்கள்கிழமை கூடுவதாக ஒத்திவைக்கப்பட்டது. கமலா ஹாரீஸ் தலைமையிலான செனட் அவையில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு இல்லை.












Click it and Unblock the Notifications