ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு லட்சம்... சொன்னதை செய்து காட்டிய அமெரிக்க அதிபர் பைடன்
வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டாலர்கள் வழங்கும் அமெரிக்காவின் மிகப் பெரிய நிதியுதவி திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளையும் கடுமையாகப் பாதித்தது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா பரவலிலிருந்து தப்பவில்லை.
அதிலும் குறிப்பாக கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக அங்கு கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் பாதிப்பு
அதேநேரம் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் மிகப் பெரியது. 1930களில் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சிக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார பாதிப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த பொருளாதார பாதிப்பால் பல அமெரிக்கா நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும், பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்தனர்.

பைடன் வாக்குறுதி
இதனால் பல லட்ச அமெரிக்கக் குடும்பங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,400 டாலர்(இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்) வழங்கப்படும் என்று தனது தேர்தல் பரப்புரையின் போது ஜோ பைடன் அறிவித்திருந்தார். இதற்கு அப்போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், இது வெறும் கற்பனை திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டாலர்கள் வழங்கும் அமெரிக்காவின் மிகப் பெரிய நிதியுதவி மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்ட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

நாளை கையெழுத்து
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 220 பேரும் எதிராக 211 பேரும் வாக்களித்தனர். எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதேநேரம் ஆளும்கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் நாளை அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திடவுள்ளார். தேர்தலின்போது தான் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை மிக விரைவில் அதிபர் பைடன் நிறைவேற்றியுள்ளது, அவரது போலிட்டிகல் மைலேஜை அதிகப்படுத்தியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோதும், அந்நாட்டு நாடாளுமன்றம் இதேபோன்ற ஒரு மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், அப்போது முன்மொழியப்பட்டது. அப்போது ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 600 டாலர் (இந்திய மதிப்பில் 43,000) வழங்கும் வகையிலிருந்தது. இருப்பினும், இந்த நிதியுதவி குறைவாக உள்ளதாகவும் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 2000 டாலர் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறி டிரம்ப் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 2.98 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,610 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.42 லட்சத்தைக் கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications