அசிங்கமா போச்சு! ஒரே ஒரு ஓட்டு வாங்கிய டிரம்ப்.. சபையில் விழுந்து விழுந்து சிரித்த எம்.பிக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அக்கட்சி எம்.பிக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால் இந்த இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழலில், சபாநாயகர் பதவிக்கு டிரம்பின் பெயர் முன்மொழியப்பட அவருக்கு ஒரே ஒரு ஓட்டுமே கிடைத்த காமெடி நடந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிம்ரப், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். அந்த நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் ஒரே ஓட்டு வாங்கியிருக்கிறார். ஒரே ஓட்டு மட்டும் விழுந்ததால் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி 222 இடங்களையும் ஜனநாயக கட்சி 212 இடங்களையும் வென்றது. அதிபர் தேர்தலில் தோற்ற போதிலும் பிரதிநிதிகள் சபை டிரம்பின் குடியரசுக்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றது. இதனால், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்து வந்த நான்சி பெலோசி தனது பதவியில் இருந்து விலகினார்.

புதிய சபாநாயகர் தேர்வு
இதையடுத்து, புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் கெவின் மெக்கர்த்தி போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் போட்டியிட்டார். சபாநாயகராக தேர்வு பெற 212 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே தேவை என்பதால் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட கெவின் மெக்கர்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என்றே அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்தனர்.

தொடர்ந்து இழுபறி
ஆனால், குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கர்த்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபாநாயகர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 11 முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும் இழுபறி நீடித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்காவின் 163 ஆண்டு கால வரலாற்றில் சபாநாயகர் தேர்வுக்கு இந்த அளவுக்கு சிக்கல் நீடிப்பது இதுவே முதல் முறையாகும்.

டொனால்டு டிரம்ப் போட்டி
அமெரிக்க பிரதிநிதிகள் சபையை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது போட்டியிடும் நபர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும் தனது பங்குக்கு முயற்சி செய்தார். முன்னாள் அதிபராக வேறு இருக்கிறோமே எப்படியும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் ஓட்டுக்கள் நமக்குத்தான் கிடைக்கும் என்ற திட்டத்துடன் ஆசை ஆசையாய் டிரம்ப் போட்டியிட்டார். அதன்படி வாக்கெடுப்பும் நடைபெற்று முடிந்தது.

விழுந்து விழுந்து சிரித்த பிரதிநிதிகள்
தேர்தல் முடிவை அறிவித்த அதிகாரி டிரம்பிற்கு ஒரே ஒட்டு மட்டுமே விழுந்து இருப்பதாக கூறினார். இதைக் கேட்டதும் பிரதிநிதிகள் சபையில் இருந்த மொத்த உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். இத்தனைக்கும் டிரம்பிற்கு ஒரே ஒரு ஓட்டு போட்ட அந்த எம்.பி யார்? என்ற அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மேட் கேட்ஸ் என்பவர்தான் டிரம்பிற்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளார்.

வேறு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை
11-வது சுற்றில் டிரம்பை முன்மொழிந்ததும் இவர்தான். இதன்படி பார்க்கும் போது முன்மொழிந்த மேட் கேட்ஸ்-சை தவிர வேறு ஒருவர் கூட டிரம்பிற்கு வாக்களிக்கவில்லை. டொனால்டு டிரம்பிற்கு கிடைத்த ஒரே ஒரு ஓட்டு மட்டும் கிடைத்ததால் சமூக வலைத்தளங்களிலும் டிரம்பை பலரும் கேலி செய்து கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications