கதறிய 2 வயது குழந்தை.. கார் கண்ணாடியை உடைத்து கைது செய்த அதிகாரிகள்.. அமெரிக்காவில் பயங்கரம்
வாஷிங்டன்: டிரம்ப் அரசு சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அங்கு எடுக்கப்படும் சில நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. அப்படித் தான் இப்போது அங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் இரண்டு வயதுக் குழந்தையைக் கைது செய்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு கடந்த ஓராண்டாகவே குடியேற்ற அதிகாரிகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேநேரம் சில நேரம் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பேசுபொருளாகவும் மாறுகிறது. இதற்கிடையே ஐசிஇ எனப்படும் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

2 வயது குழந்தை கைது
அங்கு மினியாபொலிஸில் வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் குடிவரவு அதிகாரிகள் 2 வயதுக் குழந்தையைக் கைது செய்தனர்.. அந்தக் குழந்தை தனது தந்தையுடன் காவலில் உள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. குழந்தையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி, அவர்கள் டெக்சாஸுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பாகக் குடும்பத்தினரின் வழக்கறிஞர் கூறுகையில், "நீண்ட தாமதத்திற்குப் பிறகு குழந்தையை விட்டுவிட்டனர். அவர் பயத்தில் இருக்கிறார். மீண்டு வர பல மணி நேரம் ஆகும் என்றே நினைக்கிறோம்" என்றார்.
என்ன நடந்தது
எல்விஸ் ஜோயல் திபான்-எச்செவர்பியா மற்றும் அவரது 2 வயது மகள் குளோ ரெனாட்டா திபான் வில்லாசிஸ் ஆகியோர் அருகே இருந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மினியாபொலிஸ் சபை உறுப்பினர் ஜேசன் சாவேஸ், "வாகனத்தில் வந்த சிலர் காரின் ஜன்னலை உடைத்து அவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். நீதிமன்ற வாரண்ட்டை கூட அவர்கள் வழங்கவில்லை" என்றார்.
அதேநேரம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வேறு விதமாக விளக்கமளித்துள்ளது. அதாவது குழந்தையை வைத்துக் கொண்டு ஒழுங்கற்ற முறையில் திபான் வாகனம் ஓட்டியதாகவும் அதன் அடிப்படையிலேயே கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மேலும், "அவர் ஈக்வடோரைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறி. அவர் அமெரிக்காவின் விதிகளையும் பல மீறியிருக்கிறார். குழந்தையைத் தாயார் பார்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால் நாங்கள் உடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிகாரிகள் காரில் இருந்து வெளியே வரச் சொன்னபோதும் அதைக் கேட்க மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியில்லாமல் கார் கண்ணாடியை உடைக்கும் சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு திபானை காவலில் எடுத்தனர்" என்றார்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கொந்தளித்தனர். சுமார் 120 பேர் குடியேற்ற அதிகாரிகளைச் சூழ்ந்து கொண்டு, வெளியேற விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அவர்களை நோக்கி கற்களையும் குப்பைகளையும் வீசினர். அதன் பிறகு கூட்டத்தை அங்கிருந்து கலைத்துவிட்டு, இருவரையும் கைது செய்துள்ளனர்.
முதல்முறை இல்லை
அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் இதுபோல நடவடிக்கை எடுப்பது இது முதல்முறை இல்லை. கடந்த வாரம் தான் 5 வயது சிறுவனை அவர்கள் கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. அது ஓய்வதற்கு முன்பே இப்போது 2 வயதுக் குழந்தையைக் கைது செய்துள்ளனர். இதற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு இருக்கும் போதிலும் அமெரிக்காவில் வரும் காலங்களிலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றே தெரிகிறது. சுமார் 3000 குடியேற்ற அதிகாரிகள் சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
