டிரம்ப் நிறுத்தவே மாட்டார் போல! அமெரிக்காவில் மாறும் ரூல்ஸ்.. இந்தியர்களுக்கு விழுந்த இன்னொரு அடி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அப்படித் தான் இப்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இப்போது புதிய விதிகளை அறிவித்துள்ளது. அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அமல்படுத்தப்படும் இந்த ரூல்ஸ் வெளிநாட்டினருக்கு மேலும் குடைச்சலைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சில முக்கியமான எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது.

அமெரிக்கா புதிய ரூல்ஸ்
அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் நுழையும்போது, வெளியேறும்போதும் புகைப்படம் எடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் உட்பட எந்தவொரு விசா வைத்திருந்தாலும் இந்த ரூல்ஸ் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் போலியான ஆவணங்கள் தடுக்கவுமே இந்த ரூல்ஸ் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நிலம், கடல் மற்றும் விமான மார்க்கம் என ஒருவர் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைந்தாலும் வெளியேறினாலும் இந்த விதிகள் பொருந்தும்.. போட்டோ மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
போட்டோ கட்டாயம்
புதிய விதிகளின்படி, அமெரிக்காவிற்கு வரும் அல்லது அமெரிக்காவில் இருந்து கிளம்பும் அனைத்து வெளிநாட்டவர்களின் (அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்கள்) புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சேகரிப்பார்கள். இதற்கு முன் 14 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பிராசஸில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த விலக்கு நீக்கப்பட்டுள்ளது. எல்லா வயதுப் பிரிவினரும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..
ஏன் முக்கியம்
இப்போது ஏற்கனவே பெரும்பாலான பெரிய அமெரிக்க விமான நிலையங்களில் சர்வதேச விமானப் பயணிகளைச் சரிபார்க்க முக அடிப்படையிலான facial recognition தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த புதிய விதி அனைத்து ஏர்போர்ட், துறைமுகம், எல்லைப் பகுதிகளில் இந்தச் செயல்முறையைக் கட்டாயமாக்குகிறது. போலியான அடையாளத்துடன் ஒருவர் அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்கவும் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்குவோரைக் கண்காணிக்கவும் இந்த முறை பயன்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த ஆய்வில் அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி பேர் சட்டவிரோதக் குடியேறிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 42% பேர், உரிய விசாவில் வந்து, அந்தக் காலக்கெடு முடிந்த பிறகும் அமெரிக்காவில் தங்குவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால பிரச்சினை
அமெரிக்காவுக்கு இது புதிய பிரச்சினை இல்லை.. நீண்ட காலமாகவே இந்தச் சிக்கல் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 1996ல் வெளிநாட்டினர் உள்ளே வரும்போதும் வெளியேறும்போது அதைக் கண்காணிக்க ஒரு தானியங்கி அமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் தான் அதை செயல்படுத்த டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நாடு முழுக்க இந்த சிஸ்டத்தை கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதேநேரம் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் பிரைவசி மற்றும் துல்லியத்தன்மை குறித்த கேள்வி எழுப்பியுள்ளனர். கறுப்பினத்தவர்கள் மற்றும் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் இதில் அதிகப் பிழைகள் இருப்பதாகவும் இது சிவில் உரிமைகள் சிக்கல்களை மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications