டிரம்ப் தலையெழுத்தை தீர்மானிக்கும் அமெரிக்க தேர்தல்.. எது நடந்தாலும் ஒட்டுமொத்த உலகிற்கும் சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மூன்று வகையான முடிவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த 3ல் எந்தவொரு முடிவு வந்தாலும் அதன் தாக்கம் அமெரிக்காவுடன் முடிந்துவிடாது. சர்வதேச அளவில் எதிரொலிக்கவே செய்யும். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் நிலையில், நாளை மாலைக்குள் முடிவுகள் பெரும்பாலும் தெரிந்துவிடும்.

அமெரிக்க தேர்தல்
நாளை வெளியாகவுள்ள இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் நாடாளுமன்றம் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை மட்டுமில்லை.. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் செல்வாக்கையும், அவரது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை தொடர்ந்து இதேபோல செயல்படுத்த முடியுமா என்பதையும் தீர்மானிக்கும் தேர்தல் முடிவாக இருக்கும்.
இதை அமெரிக்காவின் இன்னொரு தேர்தலாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. உலகின் மிக பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றான அமெரிக்காவின் அரசியல் முடிவுகள் உலகின் மற்ற நாடுகளையும் பாதிக்கக்கூடியவை. டிரம்ப் கட்சி வெல்ல போகிறதா.. அல்லது நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் செல்கிறதா என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!
இப்போது வெளியான சர்வேக்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியே வெல்லும் என கூறப்பட்டாலும், அமெரிக்க கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருந்ததில்லை. எனவே, முடிவுகள் வெளியாகும்போது மூன்று விதமான அரசியல் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
1. ஜனநாயக கட்சிக்கு மிக பெரிய வெற்றி
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல்களில் எப்போதும் எதிர்க்கட்சிக்கே சாதகமாக இருக்கும். தற்போதைய கருத்துக் கணிப்புகளும் அதையே காட்டுகிறது. சரியும் டிரம்ப்பின் செல்வாக்கு, ஈரானுடனான போர், நுகர்வோர் செலவுகள் அதிகரித்திருப்பது, குடியேற்றக் கொள்கை, டேட்டா சென்டர் கட்டுமானத்துக்குப் போகும் நிதி ஆகியவை ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது.
இதனால் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு உள்ள பகுதிகளில்கூட ஜனநாயகக் கட்சி வெல்லும் என சொல்லப்படுகிறது. இதனால் ஜனநாயக கட்சி மிக பெரிய வெற்றியை பெற்றால், பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி கண்ரோலுக்கு போகும். செனட் சபையிலும் போட்டி கடுமையாக உள்ளது. இதிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் அது மிக அரசியல் மாற்றமாக இருக்கும்.
இதுபோல தேர்தல் முடிவுகள் வெளியானால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல் செல்வாக்கு காலி என்பதையே இது உணர்த்தும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜனநாயக கட்சி பக்கம் சென்றால்.. டிரம்ப் தான் விரும்பிய சட்டங்களை கொண்டு வர முடியாது. அடுத்த இரண்டு ஆண்டுகள் அதிபருக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.
2. இரு தரப்புக்கும் வெற்றி
இரண்டாவது ஆப்ஷன் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற்றாலும், பெரிய வெற்றியை பெற முடியாமல் போவது. இதில் நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளுக்கும் முழுமையான பெரும்பான்மை இல்லாமல் போகும். இந்த சூழலில் ஒவ்வொரு மசோதா வரும்போதும் எம்பிக்கள் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெறும். அமெரிக்காவில் நம்ம ஊரை போல கொறடாவும் இல்லை. அவரது உத்தரவின்படி எம்பிக்கள் வாக்களிக்கவும் தேவையில்லை. எனவே, ஒவ்வொரு மசோதா வரும்போதும் ஜனநாயக கட்சி எம்பிக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது டிரம்பிற்கு முக்கியம்!
இதுபோன்ற சூழலில் செனட் சபையில் ஓரிரு இடங்களை மட்டுமே ஜனநாயக கட்சி கைப்பற்றக்கூடும். வடக்கு கரோலினா போன்ற மாநிலங்களில் வெற்றி கிடைத்தாலும், குடியரசு கட்சியின் வலுவான ஆதரவு உள்ள பகுதிகளில் வெல்ல முடியாது. இதன் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஏற்படும். முக்கிய முடிவுகளை விரைந்து எடுக்க முடியாது. இதனால் நாடாளுமன்றத்தில் அடிக்கடி முட்டுக்கட்டை உருவாகலாம்.
3. குடியரசு கட்சிக்குத் தொடரும் ஆதரவு
மூன்றாவது ஆப்ரஷன் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் வென்று கண்ட்ரோலை தக்க வைப்பது. இதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றாலும் கூட இது நடந்தால் டிரம்ப் கட்சியிடம் கட்டுப்பாடு தொடர்ந்து இருக்கும். டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதையே இது காட்டும். மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஆளும் குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் டிரம்ப் விரும்பிய சட்டங்களை எளிதாக கொண்டு வரலாம்.
அமெரிக்கத் தேர்தல் ஏன் உலக நாடுகளுக்கு முக்கியம்?
இந்த மூன்று முடிவுகளில் எது நிகழ்ந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்காவுடன் மட்டும் முடிந்துவிடாது. ஜனநாயக கட்சி வென்றால் அது டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு முட்டுக்கட்டை போடும். குடியரசுக் கட்சி வென்றால் டிரம்ப் தொடர்ந்து தனது மூர்க்கத்தனமான முடிவுகளை எடுப்பார். இரு கட்சிகளுக்கும் இடையே வெற்றி பிரிந்தால், முக்கியமான முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அமெரிக்கா உலக வல்லரசாக இருப்பதால் அதன் முடிவுகள் சர்வதேச அளவில் எதிரொலிக்கும். இதனால் இந்த தேர்தல் டிரம்ப்புக்கு வெற்றி - தோல்வி என்பதை விட அடுத்த இரு ஆண்டுகள் சர்வதேச அரசியலை தீர்மானிக்கும் ஒன்றாகவே இருக்கும்.





Click it and Unblock the Notifications
