அமெரிக்க டாலர் 400.. கரூர் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ஷாக்.. 100 அடி தூரத்திலேயே போலீஸ்.. கொடுமை
கரூர்: கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள ஆசிரியர் வீட்டில் 32 சவரன் தங்க நகைகள், 400 அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பிய ஆசிரியருக்கு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
கரூர் - திருச்சி சாலையில் சுங்ககேட் அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ்... இவர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் வருடம் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.. அதற்கு பிறகு அந்த வேலையிலிருந்து விலகிவிட்டு டீச்சராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி தர்மராஜ் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுள்ளார்.
வீட்டை பூட்டிவிட்டு உறவினரைப் பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.
நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார்.. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 32 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. அத்துடன் 400 அமெரிக்க டாலர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தர்மராஜ், தாந்தோணிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த ஸ்டேஷன் தர்மராஜ் வீட்டுக்கு எதிரிலேயே இருக்கிறதாம்.. தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.. வீட்டின் முன்பக்க கதவிலிருந்த லாக்கர் உடைக்கப்பட்டிருந்ததையும் போலீசார் ஆய்வு செய்தனர்..
பிறகு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் வீட்டுக்குள் எப்படி நுழைந்தார்கள், எப்போது கொள்ளையில் ஈடுபட்டார்கள், எந்த வழியாக தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள வீட்டிலேயே இந்த கொள்ளை நடந்துள்ளதுதான், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தர்ம ராஜ் வீடு உள்ளது.. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை.. தர்மராஜ் வெளியூர் செல்வதை நன்றாக தெரிந்தவர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க கூடும் என்கிறார்கள்.. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
